Wednesday 13 May 2015

50 ஆயிரம் 'போலி' ஆசிரியர்கள். தமிழகம் முதலிடம்



நாம் தலையில் அடித்துக்கொள்ள மற்றொரு செய்தி. வேறேன்ன செய்ய முடியும்?

யாருக்கு பதிலாகவோ போலி மாணவர்கள் தேர்வெழுதுவது உண்டு. ஆனால் இது போலி ஆசிரியர்கள் பற்றிய செய்தி.

இந்திய பொறியியல் கல்லூரிகள் தங்கள் ஆசிரியர்களை மற்ற கல்லூரிகளுடன் பகிர்ந்து கொண்டு உள்ளது இப்பொழுது நிருபணமாகியுள்ளது.

எண்ணிக்கை அளவில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் போலி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். அதாவது இரண்டு அல்லது மூன்று கல்லூரி வருகைப்பதிவேட்டில் ஒரே ஆசிரியர் பெயர் இருக்கும். ஆனால் எங்கே வகுப்பெடுப்பார்? எதாவது ஒன்றில்தான்.

மற்ற கல்லூரிகளில் ஆசிரியர் பெயர் பட்டியலில் பெயர் உள்ளதற்காக சம்பளம் வாங்குவார் இந்த போலி ஆசிரியர்.

இவர்களிடம் பொறியியல் படித்து வருகிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தால் உங்களுக்கு தூக்கம் வராது.

இந்த ஆய்வை செய்தவர்கள் எங்கள் நண்பர் ? குமாரசாமி படித்த கல்லூரியில் படித்தவர் என்றால் கணக்கில் வேறு விடுதல் இருக்கும் என்று நினைக்கிற போது இன்னும் பயமாக இருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன தீர்வு?

'போலி ஆசிரியர்களிடமிருந்து எங்கள் மாணவர்களை காப்பாற்று' என்று பால் குடம் எடுக்க வேண்டியதுதான் அப்போதுதான் இதற்கெல்லாம் ஒரு விடுதலை கிடைக்கும்.


Saturday 9 May 2015

நாளைய தீர்ப்பு

சாதாரண மனிதர்களுக்கான நீதி, சல்மான்கான்களுக்கான நீதி என நீதி இரண்டு வகைப்படும்.


நமக்கு நீதியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடையாது. ஆனால் எந்த வகை நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்று மட்டும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

அரசன் அன்று கொல்வான்  ஆண்டவன் நின்று கொல்வான் என தவறுகளை யாரோ தண்டிக்கட்டும் என்று நினைக்க ஆரம்பித்ததிலிருந்து தவறுகள் பெருகத்தொடங்கியிருக்க வேண்டும்.

தவறு செய்பவர்கள், நம் அளவில் சில தவறுகளை செய்ய அனுமதிக்க (டூ வீலர் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டுவது மாட்டினால் லஞ்சம் கொடுப்பது ) அல்லது பழக்கிவிட்டதால் ( ஓட்டுக்கு பணம் )  தவறுகளை தட்டிக்கேட்கும் தார்மீக பலத்தையும் இழந்து வருகிறோம்.

நாளைய தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு கூட நமக்கு மனோதைரியம் கிடையாது.

நாளைய தீர்ப்பு நம்முடைய மடமைக்கும் சேர்த்தே வழங்கப்படும் என்றே நினைக்கிறேன்.