Thursday 19 February 2015

வீட்டை வாங்கிப்பார் ; பணத்தை இழந்து பார் - ஃப்ளாட்ஸ் மோசடிகள் 1

இளமையிலிருந்து நான் பயந்து வந்த ஒரே பழமொழி "வீட்டைக்கட்டிப்பார் கல்யாணத்தை செய்து பார்"

அதுவும் எட்டாவது படிக்கும்போது வீடு படம் பார்த்ததிலிருந்து நிச்சயம் ஏமாறாமல் வீடு கட்ட முடியாது போலிருக்கிறது என்று நான் முடிவே செய்திருந்தேன்.

வீட்டைக் கட்டினால்தானே ஆயிரம் பிரச்சனை. கட்டிய வீட்டை வாங்கி விட்டால்... என்று மிகச் சரியாக முட்டாள்தனமாக முடிவெடுத்தேன்.

சென்னைக்கு மிக அருகில் ? நான் ஒரு ஃப்ளாட் வாங்கத் தீர்மானித்தேன். (சென்னைக்கு அருகில்  சென்னைக்கு மிக அருகில் சென்னைக்கு மிக மிக அருகில் என்று மூன்று வகையான இடங்கள் உள்ளது. விபரம் தெரியாதவர்களுக்கு அடுத்த பதிவில் பகிர்கிறேன். )

என் உறவினர் ஒருவர் எதையும் ஐந்தடி ஆழத்திற்கு அலசி ஆராய்பவர், அந்த ஃப்ளாட்ஸில் வீடு வாங்கியிருக்கிறார் என்ற ஒரு விஷயமே நான் முடிவெடுக்க போதுமானதாக இருந்தது.

மொத்தம் இருந்த 9 வீடுகளில் நான்  தேர்தெடுத்தது 8 வது வீட்டை அதுதான் இன்று வரை எனக்கு ஏழரை கொடுத்து வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிரித்தாளும் சூழ்ச்சியை மிக சிறப்பாக பாதுகாத்து பராமரித்து வருபவர்கள் ஃப்ளாட் புரோமோட்டர்கள்தான்.

புரோமோட்டர் சதுர அடிக்கு மூவாயிரம் விலை சொன்னார். இந்த விலையை உறுதி செய்து கொள்ள ஏற்கனவே அங்கே ஃப்ளாட் வாங்கி அப்போதுதான் புதிதாக குடி வந்திருப்பவர்களை  நாடினேன்.

எல்லோரும் ஒரே பதிலை வேறு வேறு மாதிரியாக சொன்னார்கள், அது 'சொல்ல முடியாது.'  'எனக்கு தெரியாது' என்றார் ஒருவர். "உங்களுக்கு என்ன சொன்னாங்களோ அதுதான் எங்களுக்கும்."  

வெளியில் விசாரித்ததில் ஒரளவு சரியான விலை என்று தோன்றியதால் நான் வாங்கிவிட்டேன்.

வீடு வாங்கிக்கொண்டு போன  ஒரு வருடத்திற்கு பிறகு வீட்டு வரி கட்டுவதற்காக எல்லோருடைய அக்ரிமெண்டும் குடியிருப்போர் நலச்சங்கம் (?) தலைவர் வசம் வந்தது. அப்போதுதான் யார் யார் எவ்வளவு ஏமாந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.  

எல்லோரையும் விட மிக மிக அதிகம் ஏமாந்திருந்த ஒரு ஐ.டி இளைஞன் உடனே வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு இடம் போய்விட்டான்.

புரோமோட்டர் யாரிடமும் சொல்லாதீர்கள் உங்களுக்கு மட்டும்தான் இந்த விலை என்று விரித்த வலையில் அவனுமே சிக்கிக்கொண்டதனால்தான் அவன் இவ்வளவு தூரம் ஏமாந்தது அவனுக்கே தெரியவில்லை.

இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்  நான் எவ்வளவு பெரிய ஏமாளி என்ற எண்ணம் என்னை உறுத்திக்கொண்டே இருக்கும் என்று அவன் சொன்னது இன்னும் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன்.

புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க அதே ப்ளாட்ஸில் இருக்கும் என் உறவினருக்கு நான் அழைப்பிதழ் கொடுக்க சென்றிருந்தபோது அவர் சோகமாக உட்கார்ந்திருந்தார். சோகமாக வாங்கிக்கொண்டார்.

நான் தோண்டி விசாரித்தபோது வரவேற்பறையின் ஒரத்திற்கு அழைத்து சென்று காண்பித்தார்.  மேற்சுவர் முழக்க ஈரமாக இருந்தது. அதை ஒட்டியிருந்த  பாத்ரூமை திறந்து காண்பித்தார். மழை நின்ற பிறகு மரத்திலிருந்து மழைத்தண்ணீர் சொட்டுவது போல மேலிருந்து தண்ணீர் இல்லை அவரது கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது..

அப்போதே புரிந்து விட்டது எனக்கும் இப்படி ஒரு நாள் கண்ணீர் சொட்டப் போகிறது என்று...

தொடரும்...

( ஏன் என்கிறீர்களா? ஏமாந்த விஷயங்கள் அவ்வளவு இருக்கிறது)









8 comments :

  1. தெய்வத்திருமகள் படத்தில் வக்கீல்கள் சொல்லும் அச்சச்சச்சோ அப்பப்ப்பா என்கிற அளவிற்கு ஃபீல் பண்ணலாம். அந்த அளவிற்கு ஒவ்வொருவரிடமும் ஒரு கதை. அதையெல்லாமும் கேட்டு பதிவிடலாம் என்றிருக்கிறேன். அதைப் படித்தால் அட ராவணா என்றும் சொல்வீர்கள். நன்றி

    ReplyDelete
  2. உலகிலேயே மிகக் கொடூரமான வில்லன்களும் பயப்படும் சிலர் உண்டென்றால் அவர்கள் பிளாட் ப்ரமோட்டர்களே! எவ்வளவு வித விதமான பொய்கள்! அதுவும் அவர்களிடம் காசைக் கொடுத்து மாட்டிக்கொண்டு படும் பாடு..

    மும்பையில் ஒரு பல மாடிக் கட்டிடத்தில் உள்ள லிப்ட் வேலை செய்யாததாலும், அந்த பிளாட் பிரமோட்டர்கள், பராமரிப்பும் அவர்கள் பொறுப்பில், சரி செய்யாததாலும் எட்டாவது மாடியில் குடியிருக்கும் ஒரு பெண்மணி மூன்று வருடங்களாக கீழேயே வரவில்லையாம்! எந்த அளவுக்கும் போவார்கள் இவர்கள்.

    அந்த ஐ டி இளைஞரின் லாஜிக் மிகச் சரி..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எழுதியுள்ள செய்தியை படிக்கும்போதே வலிக்கிறது. அந்த பிளாட்டில் உள்ள எல்லோரும் ஒரு நாள் ரோட்டில் உட்கார்ந்திருந்தால் தன் பெயர் போய்விடுமே என்ற பயத்திலாவது அந்த ப்ரமோட்டர் அடுத்த நாள் அதைச் சரி செய்திருப்பார். ஆனால் எல்லோரும் புலம்பியபடி எதுவும் செய்யாமல் இருப்பதால் அந்த ப்ரமோட்டர் வேறு ஒரு பகுதியில் தன் அடுத்த வேலையை தொடங்கிவிடுகிறார். உங்கள் பதிலுக்கு நன்றி. தொடர்வோம் நட்போடு...

      Delete
  3. கத்தரிக்காயை பேரம் பேசி வாங்கிற மாதிரிதான் இதையும் வாங்க வேண்டியிருக்கும் போலிருக்கே :)

    ReplyDelete
  4. கத்திரிக்காய் வாங்குவதைப்போலவே இதிலும் ஏமாறுகிறோம். எப்படி தேர்தெடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறோம். வீட்டில் தினமும் திட்டுவாங்குகிறோம். குடும்பத்துல இதெல்லாம் சகஜமப்பா என்றாகிவிட்டது.

    ReplyDelete
  5. இதெல்லாம் நடந்தாலும், 40 வயது தொட்ட பல ஐ டி துறை மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்கி போட்டு வைப்பதால் விலை ஏறி கொண்டே போகிறது. அவர்கள் வருமான வரி காரணமாக செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் ..உங்கள் வீட்டின் விலை ஏறலாம். ஆனால் வாங்க ஆள் கிடைக்குமா என்பது புதிர். புதிதாக இன்னொன்று வாங்கி போடுங்களேன் ..

    ReplyDelete
  6. ஐ.டி அடிபட்டுக்கிடப்பதால் பல வீடுகளில் வீடு வாடகைக்கு என அறிவிப்பு தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் நீங்கள் சொல்கிற மாதிரி யாரும் திருந்தியதாக தெரியவில்லை.

    ReplyDelete