சினிமாவை அழிப்பது திருட்டி விசிடிக்காரர்கள் அல்ல, தியேட்டர்காரர்கள் தான். கொஞ்சம் நஞ்சம் தியேட்டருக்கு வருபவர்களையும் ஒழித்துக் கட்டாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.
டிக்கெட் வழங்குவதில் ஆரம்பிக்கிறது அவர்களின் தில்லாலங்கடி. சமீபத்தில் தேசத்தூண் அருகே ஒரு திரையரங்கில் அங்கே வேலை பார்ப்பவர்கள் யூனிபார்மிலேயே பிளாக்கில் டிக்கெட் விற்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் இல்லை என்பார்கள். இரண்டடி நகர்ந்ததும் யூனிபார்ம் அணிந்துள்ள அந்த திரையரங்க ஊழியர் நாம் கேட்கும் திரைப்படத்திற்கு இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு விலை சொல்வார். குடும்பத்தோடு வந்தவர்கள் திரும்பிச் செல்ல மனதின்றி டிக்கெட் வாங்கிக் கொள்கிறார்கள்.
இத்தனைக்கும் பிளாக்கில் விற்பவர் கையில் உள்ள டிக்கெட் தீர்ந்து விட்டால் நம் கண் முன்னாலேயே டிக்கெட் கவுண்டரில் சென்று வாங்கி வந்து தருகிறார்.
என் அருகில் இருந்த ஒருவர், "செய்யும் தவறை இப்படி நம் கண் முன்னே செய்து, பணத்தோடு நம் வயிற்றெரிச்சலையும் ஏன் வாங்கிக் கொள்கிறார்கள்?" என்றார்.
"வாக்குக்கு பணம் கொடுத்து நம்மை ஊழலுக்கு பழக்கப்படுத்துவது போல நம் கண் முன்னே இதையெல்லாம் செய்யும்போது ஒரு நாளில் நமக்கு இதுவும் பழக்கப்பட்டு விடும். அடுத்து கவுண்டரில் விற்பவரே நான்கு டிக்கெட்டை மட்டும் கொடுத்துவிட்டு அவரே வெளியில் வந்து நின்று பிளாக்கிலும் விற்பார். அப்போதும் கூட நாம் சொரணையில்லாமல் டிக்கெட் வாங்கிக் கொள்வோம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்" என்றேன்.
ஒருவழியாக டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழையும்போது ஒவ்வொருவரையும் தடவி தடவி சோதனை செய்தார்கள். நான் கூட, 'குண்டு வைத்திருக்கிறோமா?' என்று சோதிக்கிறார்கள் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது ஸ்நாக்ஸ் கொண்டு வந்திருக்கிறோமா? என்று சோதிக்கிறார்கள் என்று.
உணவகங்களில் வெளியிலிருந்து உணவு கொண்டு வரக்கூடாது என்று சொல்வது சரி. தியேட்டரில் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? அப்போதுதானே அநியாய விலையில் அவர்கள் விற்பதை நாம் வாங்கிச் சாப்பிடுவோம்.
விலையை விடவும் பெரிய பிரச்சனை அங்கே விற்கப்படுபவைகளின் தரம்.
காலைக்காட்சிக்கு வந்த பப்ஸை சூடு படுத்தி சூடு படுத்தி இரவுக்காட்சி வரை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். உணவு கெட்டு போக ஆரம்பித்துவிட்டால் கூட கவலைப்படாமல் விற்பார்கள். வாங்கிக் கொண்டு சென்றவர்கள் நன்றாக இல்லை என்றால் தூக்கிப்போட்டு போய்விடப்போகிறார்கள். நமக்கென்ன?
ஒரு முறை நான் வாங்கிய பப்ஸ் கெட்டுவிட்டது. அதை விற்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தேன். அதை அவர்கள் கண்டு கொள்ள வில்லை.
உன் வியாபாரத்தை கெடுக்கக்கூடாது என்று இதை நான் சொல்லவில்லை. யாருடைய வயிறும் கெடக்கூடாது குறிப்பாக குழந்தைகள் வயிறு என்றேன்.
இருந்தாலும் அவர்கள் அந்த டிரேயை எடுத்து உள்ளே வைப்பதாக இல்லை.
அவர்களுக்கு பணத்தை தவிர எதன் மேலும் அக்கறையில்லை என்பதை டாய்லெட்டுக்கு செல்லும்போது எல்லாம் உணர்ந்திருக்கிறேன். பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது கழிப்பிடம் போல பல திரையரங்க டாய்லெட்டுகள் இருக்கிறது.
இதை எல்லாம் எவரும் கேள்வி கேட்பதில்லை. எப்போதாவது ஒருவர் கேள்வி கேட்டால் கூட யாரும் அதைக் கண்டு கொள்வதில்லை. உங்களுக்கு வாய் இருக்கிறது என்பதைத்தான் மறந்து விட்டீர்கள். உங்களுக்காகவும் சேர்த்து பேசுகிறவர் பக்கத்தில் நின்று தலையாட்டவாவது செய்யலாமே..
முடிந்தால் அவர்களை கை தட்டி உற்சாகப்படுத்துங்கள். தியேட்டரில் நடிக்கிறவனுக்கு செய்கிறீர்கள். நல்லது நடக்கட்டும் என்று நினைத்து பேசுகிறவனுக்கு அதைச் செய்யலாமே.
தங்களுடைய பனி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி, சுரேந்திரன், குண்டூர்
ReplyDeleteதங்களுடைய பணியை புரிந்து கொண்டேன். நன்றி
ReplyDelete