Wednesday 4 March 2015

வீடு கட்டும்போது ஏமாற்றும் இன்ஜினியர்களுக்கு எதிராக ஒரு அதிரடி நடவடிக்கை

வீடுகட்டும்  இன்ஜினியர்களில் திருடர்களை கண்டறிவது எப்படி? என்று ஒரு ஆராய்ச்சி செய்யலாம் என்றிருக்கிறேன்.

என் நண்பர் ஒருவர், தான் உறுப்பினராக இருக்கும்  ஒரு சங்கத்தில் செயலாளராக இருக்கிறார், நமக்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில் ஒரு பொறியாளரை வீடு கட்டத் தேர்ந்தெடுத்தார்.

நண்பரை பொறி வைத்து பிடித்ததால் பொறியாளர் என்றுதானே  சொல்ல வேண்டும். இது போன்ற அமைப்புகளில் சேர்வது வடையை வைத்துவிட்டு எலிக்காக காத்திருப்பது போன்றதுதான்.

'நமக்கு தெரிந்தவர்தானே நம்மை ஏமாற்றமாட்டார்' என்று நினைத்தால் அது மகா முட்டாள்தனம். தெரிந்தவர்களிடம்தான் தைரியமாக ஏமாற்றுவார்கள். ஏனென்றால் முகதாட்சன்யத்திற்காக நாம் பெரிதாக பிரச்சனை செய்ய மாட்டோம் அல்லவா?


பணத்திற்கு ஆசைப்பட்டு எந்தத்தவறும் செய்யக்கூடாது என்று மார்க்கெட் மதிப்பை விட கட்டுமானத்திற்கு சதுர அடிக்கு 100 ரூபாய் கூடுதலாக கொடுக்கக்கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்.

'கூட கொடுத்தால் தவறு செய்கிற எண்ணம் வராது' என்ற எண்ணம்தான் தவறாகிப்போனது.

'எவ்வளவு நல்லவன். இவனை விட்டா இன்னொருத்தன் எப்படி நமக்கு கிடைப்பான்? என்று முடிவு செய்துவிட்டார்' அந்தப் பொறியாளர்.

கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும்போது வருபவர்கள் எல்லாம் சொல்ல சொல்லத்தான், 'கம்பி சரியில்லை செங்கல் சரியில்லை' என்பதே நண்பருக்கு புரிந்திருக்கிறது.

வாங்கிய தொகையில் பாதிக்கு கூட வேலை நடக்க வில்லை ஆனால் பணம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வேலை நடக்கட்டும் பணம் தருகிறோம் என்று சொன்ன பின் பொறியாளரையும் காணோம். அங்கே வேலை பார்த்தவர்களையும் காணோம்.

போனில் கூப்பிட்டால், "நீங்கள் கொடுத்த பணம் போதாது . பணம் கொடுத்தால்தான் கட்டுமானத்தை தொடர்வோம்" என்ற ஒரே பதில்தான் மறுமறுபடி.

"மொத்த தொகையில் பாதிக்கும்மேல் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் கால்வாசி கூட கட்டுமானம் நடக்கவில்லை" என்றிருக்கிறார் இரண்டாவது கருத்து அளித்த மற்றொரு இன்ஜினியர்

எஸ்.பி ஆபிஸில் புகார் கொடுக்க சென்றபோதுதான் தெரிந்தது . அவர் அங்கேயே பணத்தை வாங்கிக்கொண்டு இன்னும் வேலையை முடித்துக்கொடுக்காமல் இருக்கிறார் என்று.

கட்டுமானப்பொறியாளர்கள் சங்கத்திற்கு விஷயத்தை கொண்டு சென்றால் அவர் எங்கள் உறுப்பினரே இல்லை என்று கை விரித்துவிட்டார்கள்.


நண்பர் செய்த தவறுகள் என்ன?

1. தெரிந்தவர் என்பதையே நல்லவர் என்பதற்கான தகுதியாக நினைத்துக்கொண்டது.

2.      அந்தப்பொறியாளர் ஏற்கனவே கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு சென்று அதன் உரிமையாளர்களிடம் அவர் நடத்தையைப் பற்றி முழுமையாக விசாரிக்காதது. 

3. கட்டுமானப்பொருட்களின் தரத்தை எப்படி சோதிக்க வேண்டும் என்பதைப்பற்றிய தகவல்களை ஏற்கனவே வீடு கட்டி  நொந்தவர்களிடம் அல்லது  மற்ற பொறியாளர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளாதது..

4.           தரமற்ற பொருட்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தினால் என்ன செய்வோம் என்பது போன்ற எந்த ஒப்பந்தமும் வீடு கட்டுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லாதது...

இதையெல்லாம் அவரிடம் சொன்ன போது அவர் கேட்டார், "எப்படி சார் தைரியமாக தப்பு  செய்கிறார்கள்?" என்று.

ஏமாந்தவர்கள் பெரும்பாலும் ஒன்றிரண்டு பேரிடம் புலம்பிவிட்டு அவர்களின் அன்றாட வேலையை பார்க்க போய்விடுகிறார்கள்.  அதனால் ஏமாற்றுபவர்களும் அவர்களின் அன்றாட ஏமாற்று வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்குத் தீர்வுதான் என்ன ?

என் நண்பர் பாதியில் நிற்கும் வீட்டின் முன் பெரிய போர்டு வைத்தார்.

'பாதியில் நிற்கும் இந்த வீட்டை இந்த நிலையில் கட்டி முடித்திருப்பவர் இன்ஜினியர் திரு............ அவர்கள்' என்று போட்டு கூடவே அவரது கட்டுமான நிறுவனத்தின் பெயரையும் சேர்த்திருந்தார்.

அடுத்தநாள் இன்ஜினியர் வந்து கட்டுமானத்தை தொடர்ந்ததுடன் விரைவாகவும் முடித்துக்கொடுத்தார்.

இந்த சம்பவம் சொல்லும் பாடம் என்ன? சொல்லுங்கள்.


4 comments :

  1. அடுத்தநாள் இன்ஜினியர் வந்து கட்டுமானத்தை தொடர்ந்ததுடன் விரைவாகவும் முடித்துக்கொடுத்தார்.

    இந்த சம்பவம் சொல்லும் பாடம் என்ன? சொல்லுங்கள்.//
    ஆடிற மாட்டை , அடி போட்டும் கறக்கலாம்.
    அந்த போட்டு வைத்த சமாச்சாரத்துக்கு ஒரு சபாஸ்!

    ReplyDelete
  2. ஆடுற மாட்டை அடி போட்டும் கறக்கலாம். அட.. இந்த புது மொழியை பரப்பிட வேண்டியதுதான்.. நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. எந்த இடத்தில் அடித்தால் வலிக்கும் என்று தெரிந்து அடித்த உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள். இவர்களைப் போன்றவர்களை வழிக்குக் கொண்டு வர அமெரிக்காவில் yelp , angie's list போன்றவை பெரும் பலனை அளிப்பவையாக உள்ளன. எதுவும் உங்கள் நண்பர் செய்த போர்ட் அளவு சிறந்தவையாகத் தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஏமாற்றுபவர்களுக்கு எதிராக போர்டு வைத்தால் தெருவெங்கும் ஏமாற்றுபவர்களின் பெயர் பலகைகளாகிவிடும் என்ற அளவில்தானே சூழல் இருக்கிறது. விழிப்புணர்வால் அதை மாற்றுவோம். நன்றி

      Delete