Thursday 26 February 2015

விகடனுக்கு பணக்கஷ்டமா? டைம்பாஸ் என்றொரு மோசடி ஏன்?

நான் படிக்கும் ஒரே செக்ஸ் பத்திரிக்கை டைம் பாஸ் மட்டும்தான்.

காரணம் அது ஆனந்த விகடனை நடத்தும் விகடன் குழுமத்திலிருந்து வருகிறது. 

வியாழக்கிழமை எல்லாம் எனக்கு விகடனோடுதான் விடியும். திருமணமான புதிதில் விடிந்ததும் நான் விகடனுக்காக ஒடுவதைப் பார்த்து என் மனைவி தலையில் அடித்துக்கொண்டிருக்கிறார். என் தலையிலே அடிந்திருந்தால் கூட நான் ஒடுவதை நிறுத்தியிருக்கமாட்டேன்.

ஆனந்த விகடன் மீதும் அதன்  அப்போதைய ஆசிரியர் உயர்திரு பாலசுப்ரமணியன் மீதும் எனக்கு இருந்த மரியாதையை மரியாதை என்பதற்கு விளக்கமாக வைக்கலாம்.

அப்போது ஆனந்த விகடனோடு போட்டி போட்டுக்கொண்டிருந்த மற்றோரு பத்திரிக்கையில் ஒரு நடிகையின் தொடையைப்போட்டு கண்டுபிடிக்க 40 பக்கம் தள்ளி வரச்சொல்வார்கள். டீன் ஏஜ்ஜில் இருந்தபோதும் கூட அதை ஒரு மலிவான வியாபார உத்தியாக நினைத்து அந்தப் பத்திரிக்கையை ஒரு நாளும் நான் காசு கொடுத்து வாங்கியதில்லை.

இதையெல்லாம் செய்யாததால் எனக்கு விகடனை பிடிக்கும்.அது ஏற்படுத்த விரும்பும் சமூக அக்கறை பிடிக்கும். அதில் உள்ள ஒவ்வொருவரின் எழுத்தும் பிடிக்கும். ஆனந்தவிகடனில் எழுதிவரும் அத்தனை விகடன் பத்திரியாளர்களையும் ரசிப்பேன்.

நான் ஆனந்த விகடனில் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.  அதன் தாக்கமாக ஒவ்வொரு முறை விகடன் வாங்கும்போதும் அதன் ஆசிரியர்குழுவைதான் முழுவதுமாக படிப்பேன்.  கிட்டத்தட்ட மனப்பாடமே ஆகிவிட்டபோதும் ஒவ்வொரு முறையும் முதலில் அந்தப்பக்கத்தை தேடி அதில் உள்ள பெயர்களை ஒன்று விடாமல் படிப்பேன்.

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன். நான் நேசிக்கும் விகடன் இப்படிச் செய்யலாமா? என்ற ஆதங்கத்தை பதிவு செய்யப்போவதால்..

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் வெளியிட்ட விமர்சனம் "ச்சீ" என்பதுதான். ( மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை ) 

எந்த பாய்ஸை குறி வைத்து அந்தப்படம் எடுக்கப்பட்டதோ அதே பாய்ஸை குறி வைத்துத்தான் டைம்பாஸீம் வெளி வருகிறது.

அந்த திரை விமர்சனம் எழுதிய எழுத்தாளர் இன்னும் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தால்  டைம்பாஸ் பற்றி என்ன எழுதுவார்... "ச்சீ ச்சீ"  என்றா?   


இல்லை, இப்படிச் சொல்லிவிட்டு விகடனை விட்டு விலகிப்போயிருப்பாரா? இல்லை எழுத்துக்கு ஒன்று, வயிற்றுக்கு ஒன்று என்று, இன்னும் அங்கேயே எதுவும் சொல்ல முடியாமல் புழுங்கிக்கொண்டிருப்பாரா?

டைம்பாஸில் ஜாலிகேலி எல்லாம் ஒகேதான். ஆனால் அதில் வெளியிடப்படும் கிசுகிசுக்கள்.. வெளிநாட்டு நடிகை ஒரு இரவிற்கு எவ்வளவு வாங்குகிறார் என்ற செய்திகள்.. ஆபாச படங்கள். .. 

'ஆண்திமிர் அடக்கு' என்று ஆனந்த விகடனில் அட்டைப்படக்கட்டுரை எழுதிக்கொண்டே  இந்தப்பக்கம் ஆண்திமிர் வளர்க்க டைம்பாஸ் என்றொரு பத்திரிக்கையை நடத்த எப்படி முடிகிறது?


தனக்கு ஒரு குழந்தை இருப்பதையே எந்த தகப்பனாவது மறைப்பானா? மறைக்க வேண்டியிருந்தால் அந்தக்குழந்தை எவ்வளவு மோசமான குழந்தை என்று யோசித்துபாருங்கள். 

விகடன் வெளியீடுகள் என்று விகடனே விளம்பரப்படுத்தும் எந்த விளம்பரத்திலும் டைம்பாஸ் இருக்காது . டைம்பாஸிலும் விகடன் தாத்தா படம் இருக்காது. 


அவர்களுக்கே அறுவெறுப்பாக இருக்கும் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்ய நேரிடுவது ஏன்?

பெட்டிக்கடைக்காரர்களிடம் விசாரித்ததில் வந்தவுடன் விற்றுவிடுகிறது என்றார். ஐந்து ரூபாய் விலையும் அது தரும் ஆபாசக்குப்பையும் காரணமாக இருக்கலாம்.

முதலில் விளம்பரத்தில் ஜாலி கேலி கலாய் என்றெல்லாம்தான் சொன்னார்கள். அதனால்தான் வாங்கத் தொடங்கினேன். அரசியல்  நையாண்டிகள் எல்லாம் ஒ.கே.தான். ஆனால் டைம்பாஸில் பாதி ஆபாசக்குப்பையாகத்தான் இருக்கிறது.

ஏன் இப்படி செய்கிறார்கள்?

ஒரு வேளை இணையத்தில் கிடக்கும் இளைய தலைமுறையை பத்திரிக்கை படிக்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணமாக இருக்குமோ? யோசித்து யோசித்து களைத்து விட்டேன். 

வாசனை (நிறுவனர் எஸ்.எஸ். வாசன்) இழந்த விகடன் வாசனை இழந்த விகடன் என்றார் வாணியம்பாடி பேராசிரியர் ஒரு கூட்டத்தில். டைம் பாஸ் வராத காலகட்டத்தில் இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை . இப்போது வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏன் இப்படி செய்கிறார்கள்?

ஒரு வேளை பணக்கஷ்டமாக இருக்குமோ?

விகடன் விலையை மேலும் ஐந்து ரூபாய் ஏற்றுங்கள். நாங்கள் வாங்குகிறோம்.



தயவுசெய்து டைம்பாஸ் பத்திரிக்கையில் வரும் ஆபாச பக்கங்களை நிறுத்துங்கள். அதுதான் வாசகர்கள் மதிக்கும் விகடன் தாத்தா எம்பளத்திற்கு நீங்கள் செய்யும் மரியாதை.





Tuesday 24 February 2015

உங்கள் முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்பீர்களா?

தலைப்பில் உள்ள கேள்விக்கு பதில் யோசித்த பிறகு அதில் ஒரு வார்த்தை சேர்த்து தருகிறேன். மறுபடி யோசியுங்கள்.

உங்களுக்கு நடக்கும் தவறுகளை, உங்களை ஒருவர் ஏமாற்றினால் அதை தட்டிக் கேட்பீர்களா?

பெரிய அளவில் நடக்கும் தவறுகளை விடுங்கள். சிறிய விஷயங்களைக் கூட கேள்வி கேட்கிற தைரியம் பலருக்கும் இல்லையே.. ஏன்?

டிரைன் டிக்கெட்டுக்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள். யாரோ வரிசையை மீறி டிக்கெட் எடுத்துச் செல்கிறார்கள்.  அமைதியாக இருப்பீர்களா? வரிசையில் வரச் சொல்வீர்களா?

கோவிலில் தரிசனத்திற்காக நின்று கொண்டிருக்கிறீர்கள். கதவருகே இருக்கிறவர் சந்நதியை மறைத்துக்கொண்டு நிற்கிறார். என்ன செய்வீர்கள்? நகர்ந்து நிற்கச் சொல்வீர்களா? கிடைத்த கேப்பில் பார்த்துக்கொள்வோம் என்று இருந்து விடுவீர்களா?

மீதிச்சில்லரை தர வேண்டிய நடத்துனர் அதை மறந்தது போல நடந்து கொள்கிறார். கடைசி நிறுத்தத்தில் பஸ் நின்றதும் முதல் ஆளாக இறங்கி பஸ்ஸை விட்டு நகர்ந்து நின்று கொள்கிறார். அப்போது என்ன செய்வீர்கள்?

ஏற்கனவே லாபத்தோடு இருபது ரூபாய்க்கு விற்க வேண்டிய பொருளை இருபத்தைந்து ரூபாய்க்கு விற்கிறார். இது தவறு என்று சொல்வீர்களா?

நமக்கு இழைக்கப்படும் தவறுகளை கூட ஏன் நாம் கேள்வி கேட்க மறுக்கிறோம்?

'ஏமாறுகிற இவ்வளவு பேரும் அமைதியாகத்தானே போகிறார்கள், நாம் மட்டும் ஏன் கத்திக்கொண்டு  இருக்க வேண்டும்.' என்று நினைக்கறீர்களா?

'இவன் ஒருத்தன் மட்டும்தானா  ஏமாற்றுகிறான்?' என்று மன்னித்து விடுகிறீர்களா?

உங்கள் முன் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்பீர்களா? என்று என் வலைப்பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினேன்.  ஆம் என்றவர்கள் 40 சதவீதம் பேர்.

ஏறத்தாழ 59 சதவீதம் பேர் மனதிற்குள் கொந்தளிப்பேன் என்று பதில் சொல்லியிருந்தார்கள். அதைக்  கொஞ்சமே  கொஞ்சம் வெளியில் காட்டினால் போதும் இவ்வளவு தவறுகள் நடக்காது என்று உறுதியாக நம்புகிறேன்.


ஏமாற்றுபவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும், குறைந்த பட்ச எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் இருப்பதால், திருட்டிற்கு நாமும்  உடந்தையாகி விடுகிறோம். 

ஊமைகளாக ஏன் மாறிக்கொண்டிருக்கிறோம் ? குரல் எழுப்ப ஏன் தைரியம் வரவில்லை?

எவ்வளவு பெரிய தவறு செய்தவனாக இருந்தாலும் அவனை மண்ணியுங்கள். ஆனால் செய்தது தப்பு என சுட்டிக்காட்டுங்கள். இல்லையென்றால் ஏமாற்றிவிட்டோம் என்று இறுமாப்பில் இருப்பார்கள். தாம் செய்வதை தவறு என்றே மறந்து விடுவார்கள். 

தவறு எனத் தைரியமாக சுட்டிக்காட்டிய அன்று நீங்கள் நிம்மதியாக தூங்கினால், நீங்கள் மண்ணித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அன்று அவனால் தூங்க முடியாமல் தவித்தான் என்றால் அவன் திருந்திவிடுவான் என்று அர்த்தம்.

ஏமாறுவதற்கு பழகிவிட்டோம். குறைவாக ஏமாற்றுபவர்களை நல்லவர்கள் எனறு ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டோம்.

கண்டு கொள்ளாமல் விடப்படும் தவறுகள் வரவேற்கப்படும் தவறுகள் என்பதை மறந்து விடாதீர்கள்.

Thursday 19 February 2015

வீட்டை வாங்கிப்பார் ; பணத்தை இழந்து பார் - ஃப்ளாட்ஸ் மோசடிகள் 1

இளமையிலிருந்து நான் பயந்து வந்த ஒரே பழமொழி "வீட்டைக்கட்டிப்பார் கல்யாணத்தை செய்து பார்"

அதுவும் எட்டாவது படிக்கும்போது வீடு படம் பார்த்ததிலிருந்து நிச்சயம் ஏமாறாமல் வீடு கட்ட முடியாது போலிருக்கிறது என்று நான் முடிவே செய்திருந்தேன்.

வீட்டைக் கட்டினால்தானே ஆயிரம் பிரச்சனை. கட்டிய வீட்டை வாங்கி விட்டால்... என்று மிகச் சரியாக முட்டாள்தனமாக முடிவெடுத்தேன்.

சென்னைக்கு மிக அருகில் ? நான் ஒரு ஃப்ளாட் வாங்கத் தீர்மானித்தேன். (சென்னைக்கு அருகில்  சென்னைக்கு மிக அருகில் சென்னைக்கு மிக மிக அருகில் என்று மூன்று வகையான இடங்கள் உள்ளது. விபரம் தெரியாதவர்களுக்கு அடுத்த பதிவில் பகிர்கிறேன். )

என் உறவினர் ஒருவர் எதையும் ஐந்தடி ஆழத்திற்கு அலசி ஆராய்பவர், அந்த ஃப்ளாட்ஸில் வீடு வாங்கியிருக்கிறார் என்ற ஒரு விஷயமே நான் முடிவெடுக்க போதுமானதாக இருந்தது.

மொத்தம் இருந்த 9 வீடுகளில் நான்  தேர்தெடுத்தது 8 வது வீட்டை அதுதான் இன்று வரை எனக்கு ஏழரை கொடுத்து வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிரித்தாளும் சூழ்ச்சியை மிக சிறப்பாக பாதுகாத்து பராமரித்து வருபவர்கள் ஃப்ளாட் புரோமோட்டர்கள்தான்.

புரோமோட்டர் சதுர அடிக்கு மூவாயிரம் விலை சொன்னார். இந்த விலையை உறுதி செய்து கொள்ள ஏற்கனவே அங்கே ஃப்ளாட் வாங்கி அப்போதுதான் புதிதாக குடி வந்திருப்பவர்களை  நாடினேன்.

எல்லோரும் ஒரே பதிலை வேறு வேறு மாதிரியாக சொன்னார்கள், அது 'சொல்ல முடியாது.'  'எனக்கு தெரியாது' என்றார் ஒருவர். "உங்களுக்கு என்ன சொன்னாங்களோ அதுதான் எங்களுக்கும்."  

வெளியில் விசாரித்ததில் ஒரளவு சரியான விலை என்று தோன்றியதால் நான் வாங்கிவிட்டேன்.

வீடு வாங்கிக்கொண்டு போன  ஒரு வருடத்திற்கு பிறகு வீட்டு வரி கட்டுவதற்காக எல்லோருடைய அக்ரிமெண்டும் குடியிருப்போர் நலச்சங்கம் (?) தலைவர் வசம் வந்தது. அப்போதுதான் யார் யார் எவ்வளவு ஏமாந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.  

எல்லோரையும் விட மிக மிக அதிகம் ஏமாந்திருந்த ஒரு ஐ.டி இளைஞன் உடனே வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு இடம் போய்விட்டான்.

புரோமோட்டர் யாரிடமும் சொல்லாதீர்கள் உங்களுக்கு மட்டும்தான் இந்த விலை என்று விரித்த வலையில் அவனுமே சிக்கிக்கொண்டதனால்தான் அவன் இவ்வளவு தூரம் ஏமாந்தது அவனுக்கே தெரியவில்லை.

இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்  நான் எவ்வளவு பெரிய ஏமாளி என்ற எண்ணம் என்னை உறுத்திக்கொண்டே இருக்கும் என்று அவன் சொன்னது இன்னும் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன்.

புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க அதே ப்ளாட்ஸில் இருக்கும் என் உறவினருக்கு நான் அழைப்பிதழ் கொடுக்க சென்றிருந்தபோது அவர் சோகமாக உட்கார்ந்திருந்தார். சோகமாக வாங்கிக்கொண்டார்.

நான் தோண்டி விசாரித்தபோது வரவேற்பறையின் ஒரத்திற்கு அழைத்து சென்று காண்பித்தார்.  மேற்சுவர் முழக்க ஈரமாக இருந்தது. அதை ஒட்டியிருந்த  பாத்ரூமை திறந்து காண்பித்தார். மழை நின்ற பிறகு மரத்திலிருந்து மழைத்தண்ணீர் சொட்டுவது போல மேலிருந்து தண்ணீர் இல்லை அவரது கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது..

அப்போதே புரிந்து விட்டது எனக்கும் இப்படி ஒரு நாள் கண்ணீர் சொட்டப் போகிறது என்று...

தொடரும்...

( ஏன் என்கிறீர்களா? ஏமாந்த விஷயங்கள் அவ்வளவு இருக்கிறது)









வில்லனாகும் திரையரங்கங்கள். நீங்கள் எப்போது கதாநாயகன் ஆகப்போகிறீர்கள் ?

சினிமாவை அழிப்பது திருட்டி விசிடிக்காரர்கள் அல்ல, தியேட்டர்காரர்கள் தான். கொஞ்சம் நஞ்சம் தியேட்டருக்கு வருபவர்களையும் ஒழித்துக் கட்டாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

டிக்கெட் வழங்குவதில் ஆரம்பிக்கிறது அவர்களின் தில்லாலங்கடி. சமீபத்தில் தேசத்தூண் அருகே ஒரு திரையரங்கில் அங்கே வேலை பார்ப்பவர்கள் யூனிபார்மிலேயே பிளாக்கில் டிக்கெட் விற்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் இல்லை என்பார்கள்.  இரண்டடி  நகர்ந்ததும் யூனிபார்ம் அணிந்துள்ள அந்த  திரையரங்க ஊழியர் நாம் கேட்கும் திரைப்படத்திற்கு இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு விலை சொல்வார். குடும்பத்தோடு வந்தவர்கள் திரும்பிச் செல்ல மனதின்றி டிக்கெட் வாங்கிக் கொள்கிறார்கள். 

இத்தனைக்கும் பிளாக்கில் விற்பவர் கையில் உள்ள டிக்கெட் தீர்ந்து விட்டால் நம் கண் முன்னாலேயே  டிக்கெட் கவுண்டரில் சென்று வாங்கி வந்து தருகிறார்.

என் அருகில் இருந்த ஒருவர், "செய்யும் தவறை இப்படி நம் கண் முன்னே செய்து, பணத்தோடு நம் வயிற்றெரிச்சலையும்  ஏன் வாங்கிக் கொள்கிறார்கள்?" என்றார். 

"வாக்குக்கு பணம் கொடுத்து நம்மை ஊழலுக்கு பழக்கப்படுத்துவது போல நம் கண் முன்னே இதையெல்லாம் செய்யும்போது ஒரு நாளில் நமக்கு இதுவும் பழக்கப்பட்டு விடும். அடுத்து கவுண்டரில் விற்பவரே நான்கு டிக்கெட்டை மட்டும் கொடுத்துவிட்டு அவரே வெளியில் வந்து நின்று பிளாக்கிலும் விற்பார். அப்போதும் கூட நாம் சொரணையில்லாமல் டிக்கெட் வாங்கிக் கொள்வோம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்" என்றேன்.

ஒருவழியாக டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழையும்போது ஒவ்வொருவரையும் தடவி தடவி சோதனை செய்தார்கள். நான் கூட, 'குண்டு வைத்திருக்கிறோமா?' என்று சோதிக்கிறார்கள் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது ஸ்நாக்ஸ் கொண்டு வந்திருக்கிறோமா? என்று சோதிக்கிறார்கள் என்று.

உணவகங்களில் வெளியிலிருந்து உணவு கொண்டு வரக்கூடாது என்று சொல்வது சரி. தியேட்டரில் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? அப்போதுதானே அநியாய விலையில் அவர்கள் விற்பதை நாம் வாங்கிச் சாப்பிடுவோம். 

விலையை விடவும் பெரிய பிரச்சனை அங்கே விற்கப்படுபவைகளின் தரம்.

காலைக்காட்சிக்கு வந்த பப்ஸை சூடு படுத்தி சூடு படுத்தி இரவுக்காட்சி வரை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். உணவு கெட்டு போக ஆரம்பித்துவிட்டால் கூட கவலைப்படாமல் விற்பார்கள். வாங்கிக் கொண்டு சென்றவர்கள் நன்றாக இல்லை என்றால் தூக்கிப்போட்டு போய்விடப்போகிறார்கள். நமக்கென்ன? 

ஒரு முறை நான் வாங்கிய பப்ஸ் கெட்டுவிட்டது. அதை விற்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தேன். அதை அவர்கள் கண்டு கொள்ள வில்லை.

உன் வியாபாரத்தை கெடுக்கக்கூடாது என்று இதை நான் சொல்லவில்லை. யாருடைய வயிறும் கெடக்கூடாது குறிப்பாக குழந்தைகள் வயிறு என்றேன்.

இருந்தாலும் அவர்கள்  அந்த டிரேயை எடுத்து உள்ளே வைப்பதாக இல்லை.

அவர்களுக்கு பணத்தை தவிர எதன் மேலும் அக்கறையில்லை என்பதை டாய்லெட்டுக்கு செல்லும்போது எல்லாம் உணர்ந்திருக்கிறேன். பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது கழிப்பிடம் போல பல திரையரங்க டாய்லெட்டுகள் இருக்கிறது.

இதை எல்லாம் எவரும் கேள்வி கேட்பதில்லை. எப்போதாவது ஒருவர் கேள்வி கேட்டால் கூட யாரும் அதைக் கண்டு கொள்வதில்லை. உங்களுக்கு வாய் இருக்கிறது என்பதைத்தான் மறந்து விட்டீர்கள்.  உங்களுக்காகவும் சேர்த்து பேசுகிறவர் பக்கத்தில் நின்று தலையாட்டவாவது செய்யலாமே.. 

முடிந்தால் அவர்களை கை தட்டி உற்சாகப்படுத்துங்கள். தியேட்டரில் நடிக்கிறவனுக்கு செய்கிறீர்கள்.  நல்லது நடக்கட்டும் என்று நினைத்து பேசுகிறவனுக்கு அதைச் செய்யலாமே.

Tuesday 17 February 2015

ஆம்னி பஸ் ; இரவில் நடக்கும் பகல்கொள்ளை.

இவ்வளவு தவறுகளைச் செய்கிற தைரியத்தை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்று யோசித்துக்கொண்டே இதைப்படியுங்கள். அல்லது யோசித்து விட்டு படியுங்கள்.

போன ஜென்மத்தில் நீங்கள் பாவம் செய்திருந்தால் உங்களுக்கு ஆம்னி பஸ் பயணம்தான். அப்போது அரசு பேருந்து பயணம் என்கிறீர்களா... அது ஜென்ம ஜென்மமாக பாவம் செய்தவர்களுக்குத்தான்.

எகிறும் பஸ் கட்டணம்.
ஆம்னி பஸ்ஸின் கட்டணம், கூட்டத்தை பொறுத்து அல்லது ஒட்டுநரின் மனநிலையைப் பொறுத்து (அவரேதான் நடத்துனரும்) கூடிக்கொண்டே போகும். 

ஞாயிறு ஒரு கட்டணம். பண்டிகை நாட்கள் என்றால் ஒரு கட்டணம். இதெல்லாம் விட சில உப்புமா பஸ்கள் இருக்கிறது. அவர்கள் நிமிடத்திற்கு ஒரு கட்டணம் சொல்வார்கள்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்திற்கு புரோக்கர் ஒரு கட்டணம் சொல்லி அழைத்து வருவார். அங்கு பேருந்து அருகில் நிற்பவர் ஒரு கட்டணத்தில் விற்றுக்கொண்டிருப்பார். நமது ஏமாளித்தனத்தை அவர்களே கணித்து அதற்கேற்ப ஒரு கட்டணத்தை சொல்வார்கள். 

பேருந்தில் ஏறியவுடன் விசாரித்தால் தெரியும், யார் பெரிய ஏமாளி என்று. ஆனால் 'அப்படியெல்லாம் விசாரிக்க மாட்டார்கள்' என்ற அந்தக் கொள்ளையார்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்றிவிடுவோம்.

நம்ம நேரம் நல்லா இருந்தா பஸ் கிளம்பும்.
பேருந்து இருக்கைகள் நிறைவடையும் வரை பஸ் சும்மா கிளம்புகிற மாதிரி பாவலா செய்து கொண்டே இருப்பார்கள். பஸ் கிளம்பிடுச்சு என்று நம்மை டிக்கெட் போட்டு ஏற்றிய பிறகு பஸ் நின்ற இடத்திலேயே இரண்டு மணி நேரம் உறுமிக்கொண்டே இருக்கும். இது நவீன சத்திய சோதனை. ஆனால் எவ்வளவு அடிச்சாலும் நாம் தாங்குவோம் என அவர்களுக்குத் தெரியும்.

பணம் எல்லா கறையையும் கழுவிவிடும்.
எங்காவது ஆம்னி பஸ்  விபத்தானால் எந்தப் பேப்பரிலும் செய்தி வராது. தப்பித்தவறி வந்தாலும் பெயர் வராது.  பணம் எல்லா கறையையும் கழுவிவிடும்.

கட்டணக்கொள்ளைகழிப்பறை
இவ்வளவையும் தாண்டி பேருந்து கிளம்பினால், அடுத்து அவர்களுக்கு எங்கே ஒசிச் சாப்பாடும் கமிஷனும் தருகிறார்களோ அங்கேதான் பேருந்தைக் கொண்டு போய் நிறுத்துவார்கள்.

அங்கே திறந்தவெளி புல்வெளி பல்கலைக்கழகத்தை தேடி அலைபவர்களை குச்சி வைத்துக்கொண்டு துரத்துவார்கள். பிறகு அங்குள்ள கழிப்பறையை வைத்துதான் அவர்களுக்கு வாழ்வே நடக்கிறது.

அநியாய விலைக்கடை
தரமற்ற உணவு. சுகாதாரமற்ற சூழல். அல்லது அநியாயமான விலை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் என்ன செய்தாலும் எங்கள் ஆதரவு உண்டு என்பதுபோல பணிவோடு நடந்து கொள்வார்கள் நம்மவர்கள்.

பயணிகளை மிதிக்க வேண்டும். 
பயணிகளை மதிக்க வேண்டும் என்பதை யாரோ இவர்களுக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு பயணிகளை மிதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போல.  

வாடிக்கையாளர்களை மதிக்க வேண்டும் என்ற சொன்ன மகாத்மா காந்தியே இந்தப் பேருந்தில் பயணம் செய்தால் கூட இவர்கள் மதிக்க மாட்டார்கள். 

ஒருமுறை திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த போது பெருங்களத்தூரில் வண்டியை நிறுத்தி ‘டைம் ஆயிடுச்சு. தாம்பரம் போகாது.’ என்றார்கள். பேருந்தில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட பயணிகள் தங்களுக்கு புலம்பிக்கொண்டே இறங்கினார்கள். தாம்பரம் போகும் கிண்டி போகும் என்று சொல்லித்தானே ஏற்றினார்கள். அது அவர்கள் காதுக்கே கேட்டிருக்காது. அவர்களின் சோம்பேறித்தனத்திற்கும் அலட்சியத்திற்கும் பயணிகள் எல்லோரும் பணிவோடு பலியானார்கள்.

இதையெல்லாம் கேட்டால் பிஸினஸ் என்பார்கள். எல்லோருமே இப்படித்தான்.

இந்தக் கொள்ளையை எல்லாம் நாம் பொருட்படுத்துவதே இல்லை என்ற மனநிலையை மாற்ற இது அநியாயம் என்று சொல்லுங்கள். கோபமாக சொல்ல பயமாக இருக்கிறதா? சிரித்துக்கொண்டே நிதானமாக சொல்லுங்கள்.

இந்தப் பொருட்களை நீங்கள் வாங்குகிற இடத்தில் இந்த விலை சொன்னால் உங்களுக்கு எப்படி வயிறு எரியுமோ அப்படித்தான் உங்களிடம் வாங்குபவர்களுக்கும் இருக்கும் என்று சொல்லுங்கள்.

அல்லது யாராவது இதைப்பற்றி பேசுகிறார்களா.. உடனே அவர்களோடு சேர்ந்து கொண்டு சத்தமாக பேசுங்கள்.

ஏமாற்றுகிறவர்களுக்கு எதிரான குரல்கள் சத்தமாகவும் ஒன்றாகவும் ஒலிக்கும்போது இதெல்லாம் ஒருநாள் ஒழிந்துவிடும்.


அதுவரை தினமும் குளிக்கும்போது முதுகுப்பக்கம் நன்றாக தேய்த்து குளியுங்கள். அப்போதுதான் முதுகெலும்பு என்ற ஒன்று நமக்கு உள்ளது என்பது நினைவிற்காவது வரும். 

Tuesday 10 February 2015

தமிழகத்தில் ஆம்ஆத்மி எப்போது ஜெயிக்கும்?


இந்தக்கதை எல்லோருக்கும் புரிந்துவிட்டால் தமிழகத்தில் ஆம் ஆத்மி ஜெயிக்கும்.

தமிழ் என்றொருவன். அவன் வீட்டில் வேலைபார்க்க அந்த ஊரில் இரண்டு வாட்ச்மேன்கள்தான் இருக்கிறார்கள் . இருவருமே திருடர்கள்.  

ஒரு மாதம் இவனை வேலைக்கு வைப்பான். சம்பளமும் வாங்கிக்கொண்டு காவல் காக்க வேண்டியவனே திருடுவான். 

திருடிக்கொண்டுதான் இருக்கிறான் என்று தெரிந்தும் தமிழ் அமைதியாக இருப்பதால்,தான் திருடுவதை இவர் பொருட்படுத்த மாட்டார் என்று முடிவு செய்து திருட்டின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்கிறான். 

காவலுக்கு ஆள் இல்லை என்றால் இன்னும் அதிகமாக போய்விடும் என்பதால் யாரையாவது வைத்துத்தான் ஆக வேண்டும். எனவே பொறுத்துக்கொள்வான்,தமிழ். பொறுக்க முடியாத கட்டத்தில் இவனை நிறுத்திவிட்டு அவனை வேலைக்கு வைப்பான்.

அவனை பொறுக்க முடியாத நாளில் இவனை மாற்றுவான். மாற்றி மாற்றி வைத்தாலும் ஒரு பயனும் இல்லை. இப்பொழுது அவர்கள் இருவரும் தமிழின் சொத்தில் பெரும்பகுதியை தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.

அது மட்டுமல்ல வேலைக்கு தங்களையே சேர்க்கச்சொல்லி நேர்முகத்தேர்வு நடைபெறும்போதெல்லாம் தமிழுக்கு கொஞ்சம் காசும் கொடுப்பார்கள்.

தமிழுக்கு இப்பொதெல்லாம் ரொம்பவும் மகிழ்ச்சி. தன்னிடம் திருடின காசுதான் என்றாலும் அதை தனக்கே தருகிறார்களே.. 'இவர்களையே மறுபடி வேலைக்கு வைத்துக்கொண்டால் என்ன?' என்றே ஆசைப்படுகிறான்.

இல்லையென்றால் அவனுக்கு தெரிந்த மாற்று வழி திரையரங்குகளில் போய் வேலைக்கு ஆள் தேடுவான். நல்ல காவலன் இங்கிருந்துதான் கிடைப்பான் என்று.

அங்கிருப்பவனோ வேலைக்கு ஆள் தேடியாவது நாலு பேர் வருகிறார்களே என்று திரையரங்கத்திற்கு கூட்டம் வந்தால் போதுமென்பதற்காக, "நான் வேலைக்கு வருகிறேன் வருகிறேன்" என்று அவனும் போக்குக்காட்டிக்கொண்டே இருப்பான்.

நீங்கள் கேட்கலாம், "அது எப்படி அந்த ஊரில் இரண்டே வாட்ச்மேன்கள்தான் இருக்கிறார்களா?  நன்றாக 'நடக்க'க்கூடியவர், மரம் வெட்டக்கூடியவர், மக்கழே என்று பேசக்கூடியவர் என அந்த ஊரில் வேறு யாரையாவது முயற்சி செய்து பார்த்திருக்கக்கூடாதா..?" என்று.

அதையும் ஒரிரு முறை முயற்சித்து பார்த்துவிட்டான். காவல் காப்பதற்கு பதில் அவர்கள் காமெடிதான் செய்தார்கள்.

நன்றாக நடக்கக்கூடியவர் நன்றாக அழக்கூடியவராக இருப்பதால் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறவரிடம் காவல் பொறுப்பை எப்படி கொடுப்பது என்று யோசிக்கிறான் தமிழ். மற்றவர்களைப்பற்றி எல்லாம் இனி அவன் என்றுமே யோசிக்கப்போவதில்லை.

பக்கத்து ஊரில் டில்லி பாபு என்றொருவன். "என் வீட்டை காவல் காக்க வேறோருவர் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வரை வரும் எவனும் திருடத்தான் செய்வான். அது என் வேலை" என்று அவனே களத்தில் இறங்கி காவல் காக்கவும் தொடங்கிவிட்டான்.

தமிழ் என் நண்பன். நான் என்ன செய்யட்டும்? நீங்களே சொல்லுங்கள்.

டெல்லிபாபு திருட்டை ஒழிப்பதை பற்றி தெளிவாக பேசுவதால், அவனை அழைத்து, தமிழுக்கும் தன் உத்தியை கற்றுக்கொடுக்கச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


கடன்வாங்கியவனிடம் திருடுவது ; இது மோசடியில் புதுவகை.

சுழி சதவீத வட்டிக்கடன் ஒன்று வாங்கியிருக்கிறேன். காரணம் வேறென்ன என் சுழி சரியில்லாததால்தான்.

சுழி சதவீத வட்டிக்கடன் புரியாதவர்களுக்கு ஜீரோ பர்ஸன்ட் இன்ட்ரஸ்ட்.

33000 ரூபாய் தொலைக்காட்சிக்கு பத்து மாத தவணையாக மாதம் 3300 ரூபாய் கட்டி அடைக்க வேண்டும்.

டிவி வருவதற்கு முன்பே தவணைக்கட்ட வேண்டிய தேதி, தொகை எல்லாம் செல்லுக்கு குறுஞ்செய்தியாக வந்துவிட்டது.

முதல் தவணைக்கு ஐந்து நாள் முன்பாக ஒரு நினைவூட்டல்.

என் வங்கி கணக்கில் பணம் இருக்கிறது என்ற தைரியத்தில் தவணைக்கு முதல் நாள் வந்த செய்தியை நான் முழுமையாக  படிக்கவில்லை. அதிலிருந்துதான் அவர்களுடைய திருவிளையாடல் துவங்கியது.

கணக்கில் கூடுதலாக 700 ரூபாய் பிடித்திருக்கிறார்கள்.  இதை இரண்டு மாதத்திற்கு பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

கேட்டதற்கு இன்சூரன்ஸ் போடப்பட்டிருக்கிறது என்றார்கள். "என் அனுமதியில்லாமல் யார் போட்டார்கள்?" என்றேன்.

தொலைபேசியில் கேட்டதாக சொன்னார்கள். அது எப்படி சாத்தியம்? என்னிடம் கேட்டிருந்தால் இப்போது கேள்வியே எனக்கு வரப்போவதில்லையே? என்றேன்.

மிகக்கடுமையாக கேட்டவுடன் மூன்று தவணை செலுத்தியபிறகு திரும்பத்தருவதாக சொன்னார்கள்.

இப்போது நான்காவது தவணையும் முடிந்துவிட்டது. இன்னும் பணம் வந்தபாடில்லை.

எனக்கு எழுந்த சந்தேகங்கள் :

என் அனுமதியில்லாமல் என் கையெழுத்து இல்லாமல் என் பெயரில் எப்படி இன்சூரன்ஸ் போட்டார்கள்.?

சரி. ஏன் கடைசி வரை இன்சூரன்ஸ் டாக்குமென்ட் எதையும் அனுப்பவில்லை?

என் அனுமதியில்லாமல் என் கையெழுத்து இல்லாமல் என் வங்கிக் கணக்கில் இருந்து எப்படி கூடுதலாக பணம் எடுத்தார்கள்?

ஒரு நாள் தப்பி தவணையை செலுத்தினாலும் அபராதத்தொகை கேட்பவர்கள் என்னிடமிருந்து கூடுதலாக பிடித்த தொகைக்கு அபராதம் செலுத்துவார்களா?

இது போல இன்னும் எத்தனை பேரிடம் செய்திருக்கிறார்கள்

இதைப்படிப்பவர்கள் மேலும் நொந்து கொள்ள இன்னும் ஒரு கூடுதல் தகவல் : சுழி சதவீத கடன் என்ற ஒன்றே மோசடிதான். வட்டியை முன்கூட்டியே பொருளில் ஏற்றிய பிறகுதான் விளம்பரமே கொடுப்பார்கள்.

சரி யார் அவர்கள் என்கிறீர்களா?

என் பணம் திரும்ப வந்ததும் வெளியிடுகிறேன்.  இல்லாவிட்டாலும் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். சென்னையில் எந்த ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ஷோரூம் சென்றாலும் கட்டாயம் இவர்கள் டேபிள் போட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

கண்டுபிடிக்க முடியாதவர்கள் பஜ்ஜி பிய்த்து மாற்றி சாப்பிடுங்கள்.


Sunday 8 February 2015

உணவங்களில் நடக்கும் மோசடி. இல்லை அதுக்கும் மேல...

"வீட்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க.." என்று, எதையும் நகைச்சுவையாகச் சொல்லும் என் நண்பர் ஒருவர் தன் உணவகத்தில் எழுதி வைத்திருந்தார்.

இது உணவகம் பற்றியது. ஆனால் சுவையானது அல்ல;

சமீபத்தில் சென்னையின் உயர்தர ? இல்லை உயர்விலை உணவகம் ஒன்றில் சாப்பிடச்சென்றிருந்தேன். 7 டேஸ்ட் ஊத்தப்பம் ஆடர் கொடுத்தேன்.

இட்லி சிறுத்து சின்னதாகிக்கொண்டே வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை விடவும் சின்னதாக கிட்டத்தட்ட பழைய இரண்டு ரூபாய் அளவில் இருந்தது ஊத்தப்பம். 

"சர்வரிடம் என்ன இது?" என்றேன். "7 டேஸ்ட் ஊத்தப்பம்" என்றார் அப்பாவியாக.

"இந்த வட்டம் வளையளை விட சின்னதாக இருக்கிறதே. இதன் விட்டத்தை யார் முடிவு செய்கிறார்கள். அவர்களை கொஞ்சம் வரச்சொல்லுங்கள்" என்றேன்.

ஒரு ஸபாரி, 'என்னப்பா பிரச்சனை?' என்ற லுக்கில் வந்தவர் ஊத்தப்பம் வடையின் வட்டத்தில்  இருந்ததை பார்த்து அதிர்ந்து நின்றார். ஸாரி என்று மாற்றித்தரச் சொன்னார்.

எனக்கு கோபம் உணவகம் நடத்துபவர்கள் மேல் வரவில்லை. எந்தக்கேள்வியும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு பில்லைக்கூட சரிபார்க்காமல் பணம் கொடுத்துவிட்டு வருகிறவர்கள் மீதுதான்.

அடுத்து குடிக்க தண்ணீர் வைத்திருந்தார்கள். போர் தண்ணீர் அல்லது மெட்ரோ வாட்டர்.  இது மினரல் வாட்டர் வாங்கச் செய்கிற தந்திரம். அவர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கோடி லாபம் வருகிறது என்பதை ஒரளவு வணிகம் தெரிந்தவர்கள் கூட கணக்கிட்டு சொல்லிவிட முடியும். ஆனால் தன்னை வாழ வைத்த வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர்  கொடுக்க கூட அவர்களுக்கு மனம் வரவில்லை. நமக்கும் ஏன் என்ற கேள்வி வரவில்லை.

உங்கள் ஒனரும் இதைத்தான் குடிக்கிறாரா? என்று கேட்டேன். சற்று நேரத்தில் எனக்கு மட்டும் மினரல் வாட்டர் டம்ளரில் வந்தது.

சரி. பெரிய உணவகங்களில் இப்படி என்றால் சிறிய உணவகங்களில் வேறு வேறு பிரச்சனைகள்.

சுவைக்காக என்னவெல்லாம் கலக்கிறார்கள். அது எப்படியெல்லாம் கேடுவிளைவிக்கிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியும்.  ஆனால் இது புதுவிதமான மோசடி. உள்ளே இருப்பவர்களைத் தவிர வெளியே இருக்கும் யாருக்கும் தெரியாது.

இன்ஸ்டன்ட் காப்பிக்கு இன்னொரு வழி இருக்கிறது. தெரிந்தால் உங்களுககு வலிக்கும்.

பால் பாக்கெட்டை அப்படியே வெந்நீரில் மிதக்க விட்டுவிடுவார்கள். எப்போது தேவையோ அப்போது பாக்கெட்டை அப்படியே கத்தரித்து எடுத்து பாலைக்காய்ச்சினால் உடனடியாக காபி போட்டுவிட முடியும். உங்களுக்கு சூடான சுவையான ப்ளாஸ்டிக் பால் ரெடி.

மிச்சப்பட்டுப்போன சாதத்தை அடுத்த நாள் அரைக்கும் இட்லியோடு சேர்த்து விடுவார்கள். வடை மாவை அடை மாவோடு சேர்த்து விடுவார்கள்.

வாயை மூடிக்கொண்டு சாப்பிடுகிறவர்கள் இருக்கிற வரை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

ஒரு முறை ஒரு உணவகத்தில் விதவிதமான கேக்குகள் வரவேற்றது. ஆடர் செய்து சாப்பிட்டேன். அது தயாரித்து நாளாகியிருந்தது. ருசி மங்கியிருந்தது. சாப்பிட முடியவில்லை.

பில் வந்தது. நாற்பது ரூபாய்.

நான் இருபத்து ஐந்து ரூபாயை தட்டில் வைத்தேன். சர்வர் சார் இருபத்தைந்துதான் இருக்கிறது என்றார்.

சரியாகத்தானே இருக்கிறது என்றேன். சர்வர் விளங்காமல் பார்த்தார். இதை கேஷியரிடம் கொண்டு போய் கொடுங்கள் . அவருக்கு புரியும் என்றேன். அவர் தயங்கி தயங்கி சென்றார். 

திரும்ப வரும்போது மேற்பார்வையாளரோடு வந்தார். சார் பில் நாற்பது ரூபாய் என்றார். நானும் நாற்பதுதானே கொடுத்திருக்கிறேன். என்றேன்.

மேற்பார்வையாளரை அதற்கு மேல் மண்டை காய வைக்க விரும்பாமல்  விளக்கினேன். கேக் இந்த அளவில் இந்த சுவையில் என்று முடிவு செய்து அதற்கான விலையை முடிவு செய்கிறீர்கள். ஆனால அந்த சுவையில் இல்லை.  அதன் தயாரிப்பு தேதி எனக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு தெரியும். நாள்பட்ட ஒரு கேக்கை வாடிக்கையாளருக்கு நீங்கள் தரலாமா?

எப்படி இருபத்தைந்து ரூபாய் நாற்பது ரூபாய் ஆகாதோ.. அதை உங்களால் ஏற்க முடியாதோ அதுபோல தரமற்ற கெட்டுப்போன உணவுக்கு என்னாலும் எதுவும் தர முடியாது என்றேன்.   எனக்கு அவர் மேல் எந்த வருத்தமும் இல்லை. அவர் சாதாரண ஊழியர். நிர்வாகத்தின் எண்ணத்தை செயல்படுத்துபவர். ஆனால் அவர் புரிந்து கொண்டார். மண்ணிப்பு கேட்டார்.

வேறு கேக் தருவதாகச்சொன்னார். நான் மறுபடியுமா? என்றேன். அவர் சிரித்துவிட்டார். நான் அவரிடம் நண்பராக விடை பெறவே விரும்பினேன்.

மீண்டும் சொல்கிறேன். 

வாயை மூடிக்கொண்டு சாப்பிடுகிறவர்கள் இருக்கிற வரை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.





Friday 6 February 2015

சர்வீஸ் சென்டர் மோசடிகள்

நம்மை ஏமாற்றத்தான் போகிறார்கள் என்றே தெரிந்தே செல்கிற இடங்களில் ஒன்று டூ வீலர் மற்றும் கார் சர்வீஸ் சென்டர்கள்.

வாகனங்களை ஒழுங்காக துடைத்துக் கூட வைத்துக்கொள்ள முடியாத அவரச வாழ்க்கையில் நம்மைக் கூட பராமரிக்காவிட்டாலும் வாகனங்களை நாம் பராமரித்தே ஆக வேண்டும்.

லோக்கல் சர்வீஸ் சென்டரில் செலவு குறைவுதான் என்றாலும் ஒரிஜினல் பார்ட்ஸ் என்கிற நப்பாசையில் கம்பெனி சர்வீஸ் சென்டருக்கு சென்றால் அங்கே நம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பதம் பார்த்து விடுவார்கள்.

வாகனம் வாங்கும்போதே முதல் மூன்று அல்லது நான்கு சர்வீஸ்கள் இலவசமாக வழங்கப்படும். பல சர்வீஸ் சென்டர்கள் அத்தகைய இலவச சர்வீஸ்களை அக்கறையோடு செய்வதில்லை. வெறுமன துடைத்துக் கொடுத்து விடுவார்கள்.

அதன் பிறகு பெய்டு சர்வீஸ் எனப்படும் கட்டணப்பராமரிப்பு வரும்போது அவர்களுக்கு நம் மீதும் நம் வாகனம் மீதும் ஆர்வம் வரும்.

வாகனப்பராமரிப்பு அல்லது பழுது நீக்க கொண்டு விடும்போது அவர்கள் தரும் உத்தேச செலவுப்பட்டியலை பார்த்து நீங்கள் ஒன்றும் சொல்லாமல் வந்து விட்டால் சர்வீஸ் முடிந்த பிறகு வழங்கப்படும் பில்லில் முதலில் சொல்லப்பட்டதை விட தொகை கூடிவிடும்.

ஒரு வேளை  எஸ்டிமேஷனைப் பார்த்து நீங்கள் மலைத்தால், "இது அப்ராக்ஸிமேட் எஸ்டிமேஷன்தான் சார். முடிஞ்ச அளவிற்கு குறைச்சிடறோம்" என்பார்கள்.

( அப்படி ஒரு வேளை குறைத்தால் நீங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் என்று சொல்லப்படுவதில் நம்பிக்கை கொள்ளலாம். )

நீங்கள்  காரை சர்வீஸிக்கு கொடுத்துவிட்டு வந்த அடுத்த சில மணி நேரத்தில் உங்களுக்கு போன் வரும்.  "அண்டர் கோட்டிங் பண்ணிடுங்க கல் அடிபடாமல் இருக்கும்." " பெயிண்ட் பாலிஷ் செய்து விடுங்கள் கண் அடி படாமல் இருக்கும்" என்று பில் தொகையை ஏற்ற முயற்சிப்பார்கள். 

அது உங்கள் முதல் கார் ஆக இருந்தால் நீங்கள் பயத்தில் எல்லாவற்றுக்கும் தலையாட்டித்தான் ஆவீர்கள்.

சர்வீஸின் முடிவில் அவர்கள் தருகிற முள நீள பில்லில் எதை மாற்றினார்கள் என்று உங்களால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் விளக்கியே சொன்னாலும் பேனட்டிற்குள் உங்களால் மண்டையை விட்டுப்பார்க்க முடியாது. 

சரி சர்வீஸ் சென்டரில் இருக்கும் சர்வீஸ் அட்வைஸர்தானே இதையெல்லாம் முடிவு செய்கிறார் அவரை நட்பாக பழகியோ அல்லது பணிவாகப்பேசியோ கரெக்ட் செய்துவிடலாம் என்று நீங்கள் கணக்கிட்டால் நீங்கள் அப்பாவி என்று அர்த்தம். 

பில் தொகை கூடினால் அவருக்கு இன்சென்டிவ் எனப்படும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பதால் அவர் உங்கள் காரை மனதில் வைத்து திட்டமிடமாட்டார். தனக்கு இந்த மாதம் என்ன இன்சென்டிவ் தேவை என்பதை வைத்தே அனைத்தையும்  முடிவு செய்வார்.

கார் விற்பதற்கு போட்டியிருப்பதால் அங்கே விட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை சர்வீஸில் பிடித்துக்கொள்ளலாம் என்பதுதான் நிறுவனங்களின் வணிக தந்திரம்.

சரி இதையெல்லாம் டூ வீலர் மற்றும் கார் வைத்து நாம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுக்கான ஒரு தண்டனை என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதானா..?

எனக்குத் தெரிந்த சில தீர்வுகள் :

சும்மா சர்வீஸ் சென்டர் ரிசப்ஷனில் வைத்து எதையெல்லாம் மாற்ற வேண்டும் என வெறுமன சொல்லும் விளக்கங்களால் ஒரு பயனும் இல்லை. கடவுள் இருக்கிறார் என்பதைப்போல வெறுமன நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீங்கள் தலையாட்டிவிட்டு வரவேண்டும்.

எந்தப்பாகத்தையெல்லாம் மாற்ற வேண்டும் என்று ஏன் முடிவெடுக்கிறார்கள்? எப்படி முடிவெடுக்கிறார்கள்? என்பதை நம் வாகனத்தில் அந்தப் பகுதியை காண்பித்து விளக்க வலியுறுத்த வேண்டும்.

 மாற்றிய பிறகும் அதை நமக்கு காட்டச்சொல்லி வலியுறுத்த வேண்டும். இதை நாம் கேட்டுச்செய்யாமல் கம்பெனிகளாகவே முன்வந்து செய்ய வேண்டும். அல்லது காத்திருப்பாளர் அறையிலிருந்தே நம் வாகனம் சர்வீஸ் செய்யப்படுவதை வீடியோவில் கண்காணிக்க வசதி செய்யப்பட வேண்டும்.

அது வரை இந்தப் புரட்சி போராட்டத்திற்கு ஒரு பிரபு வர வேண்டும் என்று காத்திருப்போம்.

Thursday 5 February 2015

திருடர்களின் தேசம்

ஏன் ஏமாற்றுகிறவர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்?

ஏமாறுபவர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பதால்...

ஏன் ஏமாறுபவர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள்? 

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாததால்..

ஏன் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமல் போகிறது? 

ஏமாந்தவர்கள் சங்கடத்தாலும் அவமானத்தாலும் அதை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் போவதால்..

அதனால் முதலில் நான் எப்படி எல்லாம் ஏமாந்தேன் என்று பகிரப்போகிறேன். 


என் அனுபவங்களை எழுத எழுத என்னைப்பெரிய ஏமாளி என்று நினைத்து முகவரி தேடி வர மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.


நான் ஏதோ பெரிதாக ஏமாந்திருப்பேன் என்று நினைத்து நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். ஆனால் நான் சின்னச் சின்னதாய் நிறைய ஏமாந்திருக்கிறேன்.

ஏமாறக்கூடாது என்று ஆசைப்படுபவர்கள் முதலில் இனிமேல் யாரையும் ஏமாற்றக் கூடாது என்று சத்தியம் செய்து விட்டு படிக்கத் துவங்குங்கள்..

சரி அதற்காக திருடர்களின் தேசம் என்று தலைப்பு வைப்பதா? ஏதோ தேசம் முழுக்க திருடர்கள் என்கிற அளவுக்கு அர்த்தம் ஆகிவிடாதா?

தேச வித்தியாசம் இல்லாமல் எல்லா இடத்திலும் திருடர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால் எல்லா தேசங்களும் திருடர்கள் தேசம் ஆகிவிடும். அந்த எச்சரிக்கைக்காத்தான் இந்தத் தலைப்பு.

வாங்க ஏமாறலாம்.. ஸாரி.. ஏமாறாமல் தப்பிக்கலாம்.