Tuesday 10 February 2015

தமிழகத்தில் ஆம்ஆத்மி எப்போது ஜெயிக்கும்?


இந்தக்கதை எல்லோருக்கும் புரிந்துவிட்டால் தமிழகத்தில் ஆம் ஆத்மி ஜெயிக்கும்.

தமிழ் என்றொருவன். அவன் வீட்டில் வேலைபார்க்க அந்த ஊரில் இரண்டு வாட்ச்மேன்கள்தான் இருக்கிறார்கள் . இருவருமே திருடர்கள்.  

ஒரு மாதம் இவனை வேலைக்கு வைப்பான். சம்பளமும் வாங்கிக்கொண்டு காவல் காக்க வேண்டியவனே திருடுவான். 

திருடிக்கொண்டுதான் இருக்கிறான் என்று தெரிந்தும் தமிழ் அமைதியாக இருப்பதால்,தான் திருடுவதை இவர் பொருட்படுத்த மாட்டார் என்று முடிவு செய்து திருட்டின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்கிறான். 

காவலுக்கு ஆள் இல்லை என்றால் இன்னும் அதிகமாக போய்விடும் என்பதால் யாரையாவது வைத்துத்தான் ஆக வேண்டும். எனவே பொறுத்துக்கொள்வான்,தமிழ். பொறுக்க முடியாத கட்டத்தில் இவனை நிறுத்திவிட்டு அவனை வேலைக்கு வைப்பான்.

அவனை பொறுக்க முடியாத நாளில் இவனை மாற்றுவான். மாற்றி மாற்றி வைத்தாலும் ஒரு பயனும் இல்லை. இப்பொழுது அவர்கள் இருவரும் தமிழின் சொத்தில் பெரும்பகுதியை தங்களுடையதாக்கிக் கொண்டார்கள்.

அது மட்டுமல்ல வேலைக்கு தங்களையே சேர்க்கச்சொல்லி நேர்முகத்தேர்வு நடைபெறும்போதெல்லாம் தமிழுக்கு கொஞ்சம் காசும் கொடுப்பார்கள்.

தமிழுக்கு இப்பொதெல்லாம் ரொம்பவும் மகிழ்ச்சி. தன்னிடம் திருடின காசுதான் என்றாலும் அதை தனக்கே தருகிறார்களே.. 'இவர்களையே மறுபடி வேலைக்கு வைத்துக்கொண்டால் என்ன?' என்றே ஆசைப்படுகிறான்.

இல்லையென்றால் அவனுக்கு தெரிந்த மாற்று வழி திரையரங்குகளில் போய் வேலைக்கு ஆள் தேடுவான். நல்ல காவலன் இங்கிருந்துதான் கிடைப்பான் என்று.

அங்கிருப்பவனோ வேலைக்கு ஆள் தேடியாவது நாலு பேர் வருகிறார்களே என்று திரையரங்கத்திற்கு கூட்டம் வந்தால் போதுமென்பதற்காக, "நான் வேலைக்கு வருகிறேன் வருகிறேன்" என்று அவனும் போக்குக்காட்டிக்கொண்டே இருப்பான்.

நீங்கள் கேட்கலாம், "அது எப்படி அந்த ஊரில் இரண்டே வாட்ச்மேன்கள்தான் இருக்கிறார்களா?  நன்றாக 'நடக்க'க்கூடியவர், மரம் வெட்டக்கூடியவர், மக்கழே என்று பேசக்கூடியவர் என அந்த ஊரில் வேறு யாரையாவது முயற்சி செய்து பார்த்திருக்கக்கூடாதா..?" என்று.

அதையும் ஒரிரு முறை முயற்சித்து பார்த்துவிட்டான். காவல் காப்பதற்கு பதில் அவர்கள் காமெடிதான் செய்தார்கள்.

நன்றாக நடக்கக்கூடியவர் நன்றாக அழக்கூடியவராக இருப்பதால் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறவரிடம் காவல் பொறுப்பை எப்படி கொடுப்பது என்று யோசிக்கிறான் தமிழ். மற்றவர்களைப்பற்றி எல்லாம் இனி அவன் என்றுமே யோசிக்கப்போவதில்லை.

பக்கத்து ஊரில் டில்லி பாபு என்றொருவன். "என் வீட்டை காவல் காக்க வேறோருவர் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வரை வரும் எவனும் திருடத்தான் செய்வான். அது என் வேலை" என்று அவனே களத்தில் இறங்கி காவல் காக்கவும் தொடங்கிவிட்டான்.

தமிழ் என் நண்பன். நான் என்ன செய்யட்டும்? நீங்களே சொல்லுங்கள்.

டெல்லிபாபு திருட்டை ஒழிப்பதை பற்றி தெளிவாக பேசுவதால், அவனை அழைத்து, தமிழுக்கும் தன் உத்தியை கற்றுக்கொடுக்கச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


6 comments :

  1. டில்லி பாபுவிடம் ஒரே பிரச்சனை.. வீட்டை விட காலனியையே காவல் காப்பது இன்னும் நல்லதல்லவா என்று நினைத்து வீட்டுக் காவல் வேலையிலிருந்து திடீர் என்று ராஜினாமா செய்தது தான்! பார்ப்போம். இந்த முறையாவது முழுதாக காவல் செய்கிறாரா என்று.. .

    ReplyDelete
    Replies
    1. வீட்டைப்போலவே நமக்கு காலனியும் முக்கியம்தானே. இனி நிறைய நல்லவர்கள் காவலர் வேலைக்கு வருவார்கள். அதை ஏற்படுத்தி விட்டு அப்புறம் டெல்லி பாபு காலனிக்கு வேலைக்கும் கட்டாயம் வருவார்.

      Delete
  2. Replies
    1. உடனே படித்து விட்டு பதிவிட்டதால் தங்களுக்கு பெயர் சரியானதாக இருக்கிறது. நன்றி நண்பரே.

      Delete
  3. 'நன்றாக நடக்கக் கூடியவர், ஒவ்வொரு நாளும் வீட்டைக் காவல் காக்க ஒவ்வொரு ஐடியாவாகக் கூறி எதையும் செயல்படுத்த மாட்டார் என்றும் கூறியிருக்கலாம். தமிழுக்கு நல்லது நடக்க இரண்டு காவலாளியும் ஜெயிலுக்கோ அல்லது திரும்பிவராத இடத்துக்கோ போனால்தான் சாத்தியம்.

    ReplyDelete
  4. நடக்கும் நடக்கும் நல்லது நிச்சயம் நடக்கும். நெல்லைத் தமிழன் போல ஒவ்வொரு தமிழனும் நினைத்தால்.. நன்றி நண்பரே...

    ReplyDelete