காரணம் அது ஆனந்த விகடனை நடத்தும் விகடன் குழுமத்திலிருந்து வருகிறது.
வியாழக்கிழமை எல்லாம் எனக்கு விகடனோடுதான் விடியும். திருமணமான புதிதில் விடிந்ததும் நான் விகடனுக்காக ஒடுவதைப் பார்த்து என் மனைவி தலையில் அடித்துக்கொண்டிருக்கிறார். என் தலையிலே அடிந்திருந்தால் கூட நான் ஒடுவதை நிறுத்தியிருக்கமாட்டேன்.
ஆனந்த விகடன் மீதும் அதன் அப்போதைய ஆசிரியர் உயர்திரு பாலசுப்ரமணியன் மீதும் எனக்கு இருந்த மரியாதையை மரியாதை என்பதற்கு விளக்கமாக வைக்கலாம்.
அப்போது ஆனந்த விகடனோடு போட்டி போட்டுக்கொண்டிருந்த மற்றோரு பத்திரிக்கையில் ஒரு நடிகையின் தொடையைப்போட்டு கண்டுபிடிக்க 40 பக்கம் தள்ளி வரச்சொல்வார்கள். டீன் ஏஜ்ஜில் இருந்தபோதும் கூட அதை ஒரு மலிவான வியாபார உத்தியாக நினைத்து அந்தப் பத்திரிக்கையை ஒரு நாளும் நான் காசு கொடுத்து வாங்கியதில்லை.
இதையெல்லாம் செய்யாததால் எனக்கு விகடனை பிடிக்கும்.அது ஏற்படுத்த விரும்பும் சமூக அக்கறை பிடிக்கும். அதில் உள்ள ஒவ்வொருவரின் எழுத்தும் பிடிக்கும். ஆனந்தவிகடனில் எழுதிவரும் அத்தனை விகடன் பத்திரியாளர்களையும் ரசிப்பேன்.
நான் ஆனந்த விகடனில் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதன் தாக்கமாக ஒவ்வொரு முறை விகடன் வாங்கும்போதும் அதன் ஆசிரியர்குழுவைதான் முழுவதுமாக படிப்பேன். கிட்டத்தட்ட மனப்பாடமே ஆகிவிட்டபோதும் ஒவ்வொரு முறையும் முதலில் அந்தப்பக்கத்தை தேடி அதில் உள்ள பெயர்களை ஒன்று விடாமல் படிப்பேன்.
இதெல்லாம் எதற்கு சொல்கிறேன். நான் நேசிக்கும் விகடன் இப்படிச் செய்யலாமா? என்ற ஆதங்கத்தை பதிவு செய்யப்போவதால்..
ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் வெளியிட்ட விமர்சனம் "ச்சீ" என்பதுதான். ( மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை )
எந்த பாய்ஸை குறி வைத்து அந்தப்படம் எடுக்கப்பட்டதோ அதே பாய்ஸை குறி வைத்துத்தான் டைம்பாஸீம் வெளி வருகிறது.
அந்த திரை விமர்சனம் எழுதிய எழுத்தாளர் இன்னும் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தால் டைம்பாஸ் பற்றி என்ன எழுதுவார்... "ச்சீ ச்சீ" என்றா?
இல்லை, இப்படிச் சொல்லிவிட்டு விகடனை விட்டு விலகிப்போயிருப்பாரா? இல்லை எழுத்துக்கு ஒன்று, வயிற்றுக்கு ஒன்று என்று, இன்னும் அங்கேயே எதுவும் சொல்ல முடியாமல் புழுங்கிக்கொண்டிருப்பாரா?
டைம்பாஸில் ஜாலிகேலி எல்லாம் ஒகேதான். ஆனால் அதில் வெளியிடப்படும் கிசுகிசுக்கள்.. வெளிநாட்டு நடிகை ஒரு இரவிற்கு எவ்வளவு வாங்குகிறார் என்ற செய்திகள்.. ஆபாச படங்கள். ..
'ஆண்திமிர் அடக்கு' என்று ஆனந்த விகடனில் அட்டைப்படக்கட்டுரை எழுதிக்கொண்டே இந்தப்பக்கம் ஆண்திமிர் வளர்க்க டைம்பாஸ் என்றொரு பத்திரிக்கையை நடத்த எப்படி முடிகிறது?
தனக்கு ஒரு குழந்தை இருப்பதையே எந்த தகப்பனாவது மறைப்பானா? மறைக்க வேண்டியிருந்தால் அந்தக்குழந்தை எவ்வளவு மோசமான குழந்தை என்று யோசித்துபாருங்கள்.
விகடன் வெளியீடுகள் என்று விகடனே விளம்பரப்படுத்தும் எந்த விளம்பரத்திலும் டைம்பாஸ் இருக்காது . டைம்பாஸிலும் விகடன் தாத்தா படம் இருக்காது.
அவர்களுக்கே அறுவெறுப்பாக இருக்கும் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்ய நேரிடுவது ஏன்?
பெட்டிக்கடைக்காரர்களிடம் விசாரித்ததில் வந்தவுடன் விற்றுவிடுகிறது என்றார். ஐந்து ரூபாய் விலையும் அது தரும் ஆபாசக்குப்பையும் காரணமாக இருக்கலாம்.
முதலில் விளம்பரத்தில் ஜாலி கேலி கலாய் என்றெல்லாம்தான் சொன்னார்கள். அதனால்தான் வாங்கத் தொடங்கினேன். அரசியல் நையாண்டிகள் எல்லாம் ஒ.கே.தான். ஆனால் டைம்பாஸில் பாதி ஆபாசக்குப்பையாகத்தான் இருக்கிறது.
முதலில் விளம்பரத்தில் ஜாலி கேலி கலாய் என்றெல்லாம்தான் சொன்னார்கள். அதனால்தான் வாங்கத் தொடங்கினேன். அரசியல் நையாண்டிகள் எல்லாம் ஒ.கே.தான். ஆனால் டைம்பாஸில் பாதி ஆபாசக்குப்பையாகத்தான் இருக்கிறது.
ஏன் இப்படி செய்கிறார்கள்?
ஒரு வேளை இணையத்தில் கிடக்கும் இளைய தலைமுறையை பத்திரிக்கை படிக்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணமாக இருக்குமோ? யோசித்து யோசித்து களைத்து விட்டேன்.
வாசனை (நிறுவனர் எஸ்.எஸ். வாசன்) இழந்த விகடன் வாசனை இழந்த விகடன் என்றார் வாணியம்பாடி பேராசிரியர் ஒரு கூட்டத்தில். டைம் பாஸ் வராத காலகட்டத்தில் இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை . இப்போது வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏன் இப்படி செய்கிறார்கள்?
ஒரு வேளை பணக்கஷ்டமாக இருக்குமோ?