Friday, 20 March 2015

போனது மாநிலத்தின் மானம் அல்ல; கல்வியின் மானம்


பிஹார் தேர்வு முறைகேடுகள் யாருக்கும் எந்த வித அதிர்ச்சியையும் அளித்திருக்காது என்றே நினைக்கிறேன்.

'எவ்வளவோ பார்த்துட்டோம் . இதைப் பார்க்க மாட்டோமா?' என்ற மனநிலையில்தான் மக்கள் இதைப் பார்த்திருப்பார்கள்.

எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் வந்து விட்டபிறகு, ஆசிரியர்களே லஞ்சம் கொடுத்துத்தான் அரசுப்பணிக்கு வர முடியும் என்ற நிலை இருக்கும்போது, ஒட்டுப்போட கொடுத்த பணம் பத்தாது என்று மக்கள் சண்டை போட ஆரம்பித்த பிறகு இதில் ஆச்சரியப்பட அல்லது அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது..?

தேர்வு முறைகேடுகள் எல்லா நிலைகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடக வளர்ச்சியால் அவற்றை இப்போது நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவ்வளவுதான்.

பிஹார் முதல்வர் வருந்துவதுபோல, 'இது மாநிலத்திற்கு அவப்பெயர் அல்ல'. உண்மையில் கல்வி முறைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர்.

அடுத்த பரபரப்பு செய்தி கிடைக்கும் வரையாவது இதைப்பற்றி கொஞ்சம் யோசிப்போம்.

Thursday, 5 March 2015

இந்தியாவுடைய மகளும் ; இந்தியாவுடைய மகன்களும்...


ஆண் திமிர் அடைந்திருக்கிற உச்சத்தின், குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டுகிறது, இந்தியாவின் மகள் ஆவணப்படம்.

குற்றவாளிகளில் ஒருவன் பேட்டியில் "பாடம் கற்பிக்கவே இதைச் செய்தோம்" என்கிறான். நீதியும், சிறையும் அவனுக்கு எந்தப் பாடத்தையும் கற்பிக்காததால் அப்படி பேச முடிந்திருக்கிறது. 


அவன் பேசிய ஒவ்வொரு வரிக்கும் ஒரு தூக்குத்தண்டனை தரலாம். இதயம் இல்லாத ஒருவன் எப்படி பேசுவான் என்பதற்கு ஒரு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

குற்றவாளிகளின் வழக்காளி  ( வழக்கு அறிஞர் என்று எழுத மனம் ஒப்பவில்லை)  பேட்டியில் சொல்லியிருப்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.


மாலை ஆறு மணியானால் பெண்களை எல்லாம் வீட்டுக்குள் வைத்து பூட்டி விட வேண்டும் என்கிற ரேஞ்சிற்கு பேசுகிறான். வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசிய குற்றத்திற்காக நீதி மன்றம் தானாக முன் வந்து இவன் மீது வழக்கு போடலாம்.



ஆவணப்படம் எடுத்தவர்கள் இவன் வீட்டு பெண்களிடமும் பேட்டி எடுத்திருக்க வேண்டும். ஒரு வேளை தன் சொந்த வீட்டுப் பெண்களின் கையாலேயே ஒருவன் செருப்படி வாங்குவதை காட்ட வேண்டாம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ..

காலம் நீண்டு கொண்டே செல்லுகிறபோது இந்தத்திமிரும் உயர்ந்து கொண்டே செல்லுமோ?

நாளை நம் சகோதரிகள், குழந்தைகள் நடமாடுகிற தேசமாக இது இருக்குமா? 

சினிமா, டீவி,  பத்திரிக்கைகள், விளம்பரங்கள், பொருட்களின் அட்டைகள், போஸ்டர்கள் என எதிலும் பெண்களை உடல்களாக மட்டுமே அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.


சினிமாவில் கதாநாயகர்கள் பலர் கதாநாயகிகளிடம் பொறுக்கிகளாகவே நடந்து கொள்வதால் அதைப்பார்த்து வளர்கிற இளந்தலைமுறை பொறுக்கித்தனங்களையே நாயக அம்சம் என தானும் பின்பற்றுகிறது.

இந்தச்சூழலில் இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் இருபால் மாணவர்களுக்கும் திரையிட்டு அதைப்பற்றி குழுவாக விவாதங்கள் நடத்த ஊக்குவிக்க வேண்டும். ஆண் திமிர் உருவாகும் காரணங்களை அவர்களாகவே கண்டறிய உதவ வேண்டும்.


தவறான நம்பிக்கையை ஏற்படுத்த கொழு கொழு குழந்தைகளின் படங்களை ஊட்டச்சத்து உணவு விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது என்று தடை செய்த மாதிரி பெண்களை விற்பனை பொருட்களின் விளம்பரங்களில் கவர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது என்றும் தடை கொண்டு வர வேண்டும்.

பெண்களைத் துரத்தி துரத்தி காதல் என்ற பெயரில்  டார்ச்சர் செய்ய கற்றுத்தரும் சந்தான சினிமாக்களை சென்ஸார் செய்யாமல் அனுமதிக்கும் அதிகாரிகளுக்கு இந்த ஆவணப்படத்தை போட்டு காட்ட வேண்டும்.  கும்பலின் மனோபாவத்தை உருவாக்குவதில் இதுபோன்ற படங்களின் பங்கை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.


முகேஷ் சிங் சொன்னதில் ஒரு வார்த்தை மட்டும் எனக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

"9 மணிக்கு மேல் வெளியில் சுற்றும் பெண்களுக்கு பாடம் கற்றுத்தரவே இதைச் செய்தோம்."

இன்னொரு இந்தியாவுடைய மகள் உருவாகமல் இருக்க வேண்டுமென்றால் இந்தியாவுடைய மகன்களுக்கு நாம் கற்றுத்தரவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.

Wednesday, 4 March 2015

வீடு கட்டும்போது ஏமாற்றும் இன்ஜினியர்களுக்கு எதிராக ஒரு அதிரடி நடவடிக்கை

வீடுகட்டும்  இன்ஜினியர்களில் திருடர்களை கண்டறிவது எப்படி? என்று ஒரு ஆராய்ச்சி செய்யலாம் என்றிருக்கிறேன்.

என் நண்பர் ஒருவர், தான் உறுப்பினராக இருக்கும்  ஒரு சங்கத்தில் செயலாளராக இருக்கிறார், நமக்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில் ஒரு பொறியாளரை வீடு கட்டத் தேர்ந்தெடுத்தார்.

நண்பரை பொறி வைத்து பிடித்ததால் பொறியாளர் என்றுதானே  சொல்ல வேண்டும். இது போன்ற அமைப்புகளில் சேர்வது வடையை வைத்துவிட்டு எலிக்காக காத்திருப்பது போன்றதுதான்.

'நமக்கு தெரிந்தவர்தானே நம்மை ஏமாற்றமாட்டார்' என்று நினைத்தால் அது மகா முட்டாள்தனம். தெரிந்தவர்களிடம்தான் தைரியமாக ஏமாற்றுவார்கள். ஏனென்றால் முகதாட்சன்யத்திற்காக நாம் பெரிதாக பிரச்சனை செய்ய மாட்டோம் அல்லவா?


பணத்திற்கு ஆசைப்பட்டு எந்தத்தவறும் செய்யக்கூடாது என்று மார்க்கெட் மதிப்பை விட கட்டுமானத்திற்கு சதுர அடிக்கு 100 ரூபாய் கூடுதலாக கொடுக்கக்கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்.

'கூட கொடுத்தால் தவறு செய்கிற எண்ணம் வராது' என்ற எண்ணம்தான் தவறாகிப்போனது.

'எவ்வளவு நல்லவன். இவனை விட்டா இன்னொருத்தன் எப்படி நமக்கு கிடைப்பான்? என்று முடிவு செய்துவிட்டார்' அந்தப் பொறியாளர்.

கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும்போது வருபவர்கள் எல்லாம் சொல்ல சொல்லத்தான், 'கம்பி சரியில்லை செங்கல் சரியில்லை' என்பதே நண்பருக்கு புரிந்திருக்கிறது.

வாங்கிய தொகையில் பாதிக்கு கூட வேலை நடக்க வில்லை ஆனால் பணம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வேலை நடக்கட்டும் பணம் தருகிறோம் என்று சொன்ன பின் பொறியாளரையும் காணோம். அங்கே வேலை பார்த்தவர்களையும் காணோம்.

போனில் கூப்பிட்டால், "நீங்கள் கொடுத்த பணம் போதாது . பணம் கொடுத்தால்தான் கட்டுமானத்தை தொடர்வோம்" என்ற ஒரே பதில்தான் மறுமறுபடி.

"மொத்த தொகையில் பாதிக்கும்மேல் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் கால்வாசி கூட கட்டுமானம் நடக்கவில்லை" என்றிருக்கிறார் இரண்டாவது கருத்து அளித்த மற்றொரு இன்ஜினியர்

எஸ்.பி ஆபிஸில் புகார் கொடுக்க சென்றபோதுதான் தெரிந்தது . அவர் அங்கேயே பணத்தை வாங்கிக்கொண்டு இன்னும் வேலையை முடித்துக்கொடுக்காமல் இருக்கிறார் என்று.

கட்டுமானப்பொறியாளர்கள் சங்கத்திற்கு விஷயத்தை கொண்டு சென்றால் அவர் எங்கள் உறுப்பினரே இல்லை என்று கை விரித்துவிட்டார்கள்.


நண்பர் செய்த தவறுகள் என்ன?

1. தெரிந்தவர் என்பதையே நல்லவர் என்பதற்கான தகுதியாக நினைத்துக்கொண்டது.

2.      அந்தப்பொறியாளர் ஏற்கனவே கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு சென்று அதன் உரிமையாளர்களிடம் அவர் நடத்தையைப் பற்றி முழுமையாக விசாரிக்காதது. 

3. கட்டுமானப்பொருட்களின் தரத்தை எப்படி சோதிக்க வேண்டும் என்பதைப்பற்றிய தகவல்களை ஏற்கனவே வீடு கட்டி  நொந்தவர்களிடம் அல்லது  மற்ற பொறியாளர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளாதது..

4.           தரமற்ற பொருட்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தினால் என்ன செய்வோம் என்பது போன்ற எந்த ஒப்பந்தமும் வீடு கட்டுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லாதது...

இதையெல்லாம் அவரிடம் சொன்ன போது அவர் கேட்டார், "எப்படி சார் தைரியமாக தப்பு  செய்கிறார்கள்?" என்று.

ஏமாந்தவர்கள் பெரும்பாலும் ஒன்றிரண்டு பேரிடம் புலம்பிவிட்டு அவர்களின் அன்றாட வேலையை பார்க்க போய்விடுகிறார்கள்.  அதனால் ஏமாற்றுபவர்களும் அவர்களின் அன்றாட ஏமாற்று வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்குத் தீர்வுதான் என்ன ?

என் நண்பர் பாதியில் நிற்கும் வீட்டின் முன் பெரிய போர்டு வைத்தார்.

'பாதியில் நிற்கும் இந்த வீட்டை இந்த நிலையில் கட்டி முடித்திருப்பவர் இன்ஜினியர் திரு............ அவர்கள்' என்று போட்டு கூடவே அவரது கட்டுமான நிறுவனத்தின் பெயரையும் சேர்த்திருந்தார்.

அடுத்தநாள் இன்ஜினியர் வந்து கட்டுமானத்தை தொடர்ந்ததுடன் விரைவாகவும் முடித்துக்கொடுத்தார்.

இந்த சம்பவம் சொல்லும் பாடம் என்ன? சொல்லுங்கள்.


Tuesday, 3 March 2015

4 வயது குழந்தையை குடிக்க வைத்த கொடூரன்

ஹாய் நண்பர்களே என் சகோதரி மகன் பிராந்தி குடிப்பதை பாருங்கள்.

என்ற வரிகளோடு முகநூலில் பார்த்த அந்த வீடியோ ஒரு நிமிடம் என்னை அதிரச்செய்தது. 

டாஸ்மாக் கலாச்சாரத்தில் உச்சம்

ராம்குமார் என்றொருவன் தன் அக்காவின் நான்கு வயது குழந்தைக்கு பிராந்தி ஊற்றிக்கொடுத்து அந்தக்குழந்தையை ஊக்கப்படுத்தி குடிக்க வைத்து வீடியோ எடுத்து தன் முகநூலில் பதிவேற்றம் செய்திருக்கிறான்.

குடிபோதையில் தன்னிலை மறந்த நிலையில் செய்ததா? இல்லை முகநூல் போதையில் அதிகம் பேர் ஷேர் செய்யும் வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தன்நலத்தில் செய்ததா? தெரியவில்லை.

இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் ராம்குமாரை அசிங்கமாக திட்டி தீர்த்துவிட்டார்கள். இதற்குப்பிறகும் கூட ராம்குமார் அந்த வீடியோ பதிவை தன் பக்கத்திலிருந்து நீக்க வில்லை.

இது அவன் அக்காவுக்கு இந்நேரம் தெரிந்திருக்குமா? என்று தெரியவில்லை. சிலர் காவல்துறையில் புகார் கொடுப்போம் என்று சொன்னதைக்கூட அவன் கண்டு கொண்டதாகத் தெரிய வில்லை.

அந்தப்பத்கத்தில் இருந்த இன்னொரு புகைப்படம் அவன் மனநிலையை சொல்வதாக இருக்கிறது.

எல்லாப்போதையுமே ஆபத்தானது. அழிவைத்தரக்கூடியது.

இப்படி கிறுக்குத்தனமாக வீடியோ எடுப்பதற்கு குழந்தைகளை பலிகடா ஆக்குபவர்களுக்கு நம் சட்டத்தில் என்ன தண்டனை உள்ளது?

கல்லூரியில் பணியாற்றும் நண்பர் ஒருவர் தன் மூன்றாவது படிக்கும் தன் மகனுடன் சோடா கடைக்கு சென்றுள்ளார்.

ஆப்பள் சுவை சோடா வாங்கி இருவரும் குடித்திருக்கிறார்கள். முதல் மிடறு விழுங்கிவிட்டு பையன் சொன்னானாம், "அப்பா சரக்கடிச்ச மாதிரி இருக்கு"

நண்பர் அதிர்ந்து போய், "உனக்கு எப்படி இந்த வார்த்தை தெரியும்?" என்று கேட்டிருக்கிறார்.

"டீவியில, சினிமா எல்லாம் ஜீஸ் குடித்துவிட்டு இப்படித்தான் சொல்வார்கள்" என்றிருக்கிறான் அப்பாவியாக..

நண்பர்களே .. எங்கே போகிறது நம் தேசம்?  நம் இளைய தலைமுறை?