"வீட்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க.." என்று, எதையும் நகைச்சுவையாகச் சொல்லும் என் நண்பர் ஒருவர் தன் உணவகத்தில் எழுதி வைத்திருந்தார்.
இது உணவகம் பற்றியது. ஆனால் சுவையானது அல்ல;
சமீபத்தில் சென்னையின் உயர்தர ? இல்லை உயர்விலை உணவகம் ஒன்றில் சாப்பிடச்சென்றிருந்தேன். 7 டேஸ்ட் ஊத்தப்பம் ஆடர் கொடுத்தேன்.
இட்லி சிறுத்து சின்னதாகிக்கொண்டே வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை விடவும் சின்னதாக கிட்டத்தட்ட பழைய இரண்டு ரூபாய் அளவில் இருந்தது ஊத்தப்பம்.
"சர்வரிடம் என்ன இது?" என்றேன். "7 டேஸ்ட் ஊத்தப்பம்" என்றார் அப்பாவியாக.
"இந்த வட்டம் வளையளை விட சின்னதாக இருக்கிறதே. இதன் விட்டத்தை யார் முடிவு செய்கிறார்கள். அவர்களை கொஞ்சம் வரச்சொல்லுங்கள்" என்றேன்.
ஒரு ஸபாரி, 'என்னப்பா பிரச்சனை?' என்ற லுக்கில் வந்தவர் ஊத்தப்பம் வடையின் வட்டத்தில் இருந்ததை பார்த்து அதிர்ந்து நின்றார். ஸாரி என்று மாற்றித்தரச் சொன்னார்.
எனக்கு கோபம் உணவகம் நடத்துபவர்கள் மேல் வரவில்லை. எந்தக்கேள்வியும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு பில்லைக்கூட சரிபார்க்காமல் பணம் கொடுத்துவிட்டு வருகிறவர்கள் மீதுதான்.
அடுத்து குடிக்க தண்ணீர் வைத்திருந்தார்கள். போர் தண்ணீர் அல்லது மெட்ரோ வாட்டர். இது மினரல் வாட்டர் வாங்கச் செய்கிற தந்திரம். அவர்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கோடி லாபம் வருகிறது என்பதை ஒரளவு வணிகம் தெரிந்தவர்கள் கூட கணக்கிட்டு சொல்லிவிட முடியும். ஆனால் தன்னை வாழ வைத்த வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் கொடுக்க கூட அவர்களுக்கு மனம் வரவில்லை. நமக்கும் ஏன் என்ற கேள்வி வரவில்லை.
உங்கள் ஒனரும் இதைத்தான் குடிக்கிறாரா? என்று கேட்டேன். சற்று நேரத்தில் எனக்கு மட்டும் மினரல் வாட்டர் டம்ளரில் வந்தது.
சரி. பெரிய உணவகங்களில் இப்படி என்றால் சிறிய உணவகங்களில் வேறு வேறு பிரச்சனைகள்.
சுவைக்காக என்னவெல்லாம் கலக்கிறார்கள். அது எப்படியெல்லாம் கேடுவிளைவிக்கிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் இது புதுவிதமான மோசடி. உள்ளே இருப்பவர்களைத் தவிர வெளியே இருக்கும் யாருக்கும் தெரியாது.
இன்ஸ்டன்ட் காப்பிக்கு இன்னொரு வழி இருக்கிறது. தெரிந்தால் உங்களுககு வலிக்கும்.
பால் பாக்கெட்டை அப்படியே வெந்நீரில் மிதக்க விட்டுவிடுவார்கள். எப்போது தேவையோ அப்போது பாக்கெட்டை அப்படியே கத்தரித்து எடுத்து பாலைக்காய்ச்சினால் உடனடியாக காபி போட்டுவிட முடியும். உங்களுக்கு சூடான சுவையான ப்ளாஸ்டிக் பால் ரெடி.
மிச்சப்பட்டுப்போன சாதத்தை அடுத்த நாள் அரைக்கும் இட்லியோடு சேர்த்து விடுவார்கள். வடை மாவை அடை மாவோடு சேர்த்து விடுவார்கள்.
வாயை மூடிக்கொண்டு சாப்பிடுகிறவர்கள் இருக்கிற வரை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஒரு முறை ஒரு உணவகத்தில் விதவிதமான கேக்குகள் வரவேற்றது. ஆடர் செய்து சாப்பிட்டேன். அது தயாரித்து நாளாகியிருந்தது. ருசி மங்கியிருந்தது. சாப்பிட முடியவில்லை.
பில் வந்தது. நாற்பது ரூபாய்.
நான் இருபத்து ஐந்து ரூபாயை தட்டில் வைத்தேன். சர்வர் சார் இருபத்தைந்துதான் இருக்கிறது என்றார்.
சரியாகத்தானே இருக்கிறது என்றேன். சர்வர் விளங்காமல் பார்த்தார். இதை கேஷியரிடம் கொண்டு போய் கொடுங்கள் . அவருக்கு புரியும் என்றேன். அவர் தயங்கி தயங்கி சென்றார்.
திரும்ப வரும்போது மேற்பார்வையாளரோடு வந்தார். சார் பில் நாற்பது ரூபாய் என்றார். நானும் நாற்பதுதானே கொடுத்திருக்கிறேன். என்றேன்.
மேற்பார்வையாளரை அதற்கு மேல் மண்டை காய வைக்க விரும்பாமல் விளக்கினேன். கேக் இந்த அளவில் இந்த சுவையில் என்று முடிவு செய்து அதற்கான விலையை முடிவு செய்கிறீர்கள். ஆனால அந்த சுவையில் இல்லை. அதன் தயாரிப்பு தேதி எனக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு தெரியும். நாள்பட்ட ஒரு கேக்கை வாடிக்கையாளருக்கு நீங்கள் தரலாமா?
எப்படி இருபத்தைந்து ரூபாய் நாற்பது ரூபாய் ஆகாதோ.. அதை உங்களால் ஏற்க முடியாதோ அதுபோல தரமற்ற கெட்டுப்போன உணவுக்கு என்னாலும் எதுவும் தர முடியாது என்றேன். எனக்கு அவர் மேல் எந்த வருத்தமும் இல்லை. அவர் சாதாரண ஊழியர். நிர்வாகத்தின் எண்ணத்தை செயல்படுத்துபவர். ஆனால் அவர் புரிந்து கொண்டார். மண்ணிப்பு கேட்டார்.
வேறு கேக் தருவதாகச்சொன்னார். நான் மறுபடியுமா? என்றேன். அவர் சிரித்துவிட்டார். நான் அவரிடம் நண்பராக விடை பெறவே விரும்பினேன்.
மீண்டும் சொல்கிறேன்.
வாயை மூடிக்கொண்டு சாப்பிடுகிறவர்கள் இருக்கிற வரை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.